பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த சங்கங்கள்

13

"தமிழ்ச் செய்யுட் கண்ணும், இறையனாரும் அகத்தியனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க” என்றும் கூறுமாற்றான் களவியல் உரைக்குறிப்புக்களை அவர் எடுத்தாளுந்திறம் புலனாகின்றது.

தலை இடைச் சங்கங்கள்

சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், தம் உரைக்கண், “இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கம்” என்றும், “கடைச்சங்க மிரீஇய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்” என்றும், “முதலூழி இறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது உரைப்பகுதியில் முதலிடைச் சங்கங்கள் இருந்த நகரங்களும் கவியரங்கேறிய பாண்டியர்களும் குறிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம்.


"இவ்வகை யரசரிற் கவியரங்கேறினார்
ஐவகை யரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக்
கண்ணகன் பரப்பிற் கபாடபுர மென்ப”


என்ற பழைய பாட்டானும் கபாடபுரத்தில் சங்கமிருந்த செய்தி அறியப்படுகின்றது. சேக்கிழார் பெருமானும் தாம் இயற்றிய தெய்வத்தன்மை வாய்ந்த பெரியபுராணத்தில், “சாலுமேன்மையிற் றலைச்சங்கப் புலவனார் தம்முள்” என்று தலைச்சங்கப் புலவரைக் குறித்துள்ளார்.