பக்கம்:தமிழ் விருந்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ் விருந்து அமைச்சன் வெற்றி பெற்றானே என்று அவள் திடுக்கிட்டாள். அந் நிலையில் அவள் மனம் துளங்கிற்று கண் இருண்டது. பொறியினை இயக்கிய கால் இடப் பக்கமாகச் சோர்ந்தது. விமானம் கீழ் நோக்கிச் சென்று ஒரு சுடுகாட்டில் விழுந்தது. பிணப்புகை மலிந்த மயானத்தில் அகப்பட்ட மங்கை அன்றிலம்பேடை போல அரற்றினாள்; அழுது சோர்ந்தாள். விமானம் விழுந்த அதிர்ச்சியால் அம் மயானத்தில் அரசமாதேவி ஒரு குழந்தையை ஈன்றாள். இள ஞாயிறுபோல விளங்கிய அம் மகவைக் கண்ட போது அவள் மனத்திலிருந்து வருத்தம் சிறிது மறைந்தது. ஆயினும், மகனைக் கூர்ந்து நோக்க நோக்க அவள் கண்களில் கண்ணிர் சுரந்தது; "எங்கோ பிறத்தற்குரிய மைந்தன் இங்கே பிறந்தான் " என்று எண்ணி எண்ணி ஏங்கினாள். "மகனே அரண்மனையில் இன்னிசை வாத்தியம் முழங்க, அழகிய மாதர் அருநடம் புரிய, பாவலர் பல்லாண்டிசைக்க, அணி விளக்குகள் ஒளிபரப்ப, மெல்லிய பட்டு மெத்தையிலே நீ பிறத்தற்குரியவன் அல்லனோ? "வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயர்அரங்கில் நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னற் கியல்வேந்தே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/34&oldid=878480" இலிருந்து மீள்விக்கப்பட்டது