உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

கடிதம்: 5 வளை ஒலி கேட்கிறதா!! அண்ணாவின் வடநாட்டுப்பயணம் - அரித்துவாரமும் சாதுக்களும் தம்பி, . சில தினங்களுக்கு முன்னர் நேருபண்டிதர் ஹரித்துவாரம் எனும் ஊருக்குச் சென்றிருந்தார்; இமயமலையின் அடிவாரத் திலே இருக்கிறது இந்த ஊர்; இந்துக்கள் இதைப் புண்ணிய ஸ்தலம் என்று கொண்டாடுகிறார்கள். இங்கு வந்து இமயத் திலே இருக்கும் ரிஷிகேசம் போன்ற ஸ்தலங்களுக்குப் போகி றார்கள். சிறிய ஊர்தான். நான் அங்குப் பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்திருக்கிறேன், பெரியாரின் அன்புப் பாத்திர னாக இருந்தபோது!-அந்தப் பழைய நாட்களில். அப்போது நான் விடுதலை'யில் எழுத்தாளன். பெரியாருடன் வரும் பேச்சாளன், ஆமாம், மறந்து போகிறேன் பார் தம்பி, திரா விடர் கழகச் செயலாளனாகவும் இருந்து வந்தேன். பார்ப்ப னரை இந்த நாட்டை விட்டு ஓட்டும் ஒரே அபார சேவை செய்வதற்காகவே, இன்று அல்லும் பகலும் கடுமையான நோயைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவோ லாபகரமான தொழில்கள் வருந்தி அழைத்தும், வருக! வருக! என்று பலர் பணத்தைக் கொட்டி ஆசை காட்டியும், 'லட்சியத்தைக் கைவிடேன்! துரோகிகளை ஒழித்துக்கட்டியே தீருவேன்! என்று முழக்கம் (ஆறு திங்களில் நான்கு முறையேனும்!) செய்து கொண்டும், நாள் தவறாமல் எழுதிக் கொண்டும் வரும் சிலம்புக் கூட்டத்தார், என்னைக் கேலி பேசியும் பெரியாரைப் பின்பற்றும் "பேதமை'யை எடுத்து விளக்கிக் கொண்டும், இதை நாம் உட்கொள்வதற்காக வேண்டி, இடையிடையே சுவையுள்ள விருந்து (அன்புடன்தான், மறக்க முடியுமா!) அளித்துக்கொண்டும் இருந்த நாட்கள்! திடீரென்று ஒரு தினம் பம்பாயிலிருந்து எனக்கோர் தந்தி வந்தது. "உடனே கிளம்பி ஹரித்துவாரம் வந்து சேரவும் என்று. தந்தி தந்தவர் பெரியார்; அவர் பம்பாய் பகுதி சென்று அங்கிருந்து ஹரித்துவாரம் சென்றுவிட்டு, வடநாட்டிலே வேறு பல ஊர் போக திட்டம் இட்டு இருந்தார் போலிருக்கிறது, எனக் கென்ன தெரியும்? யாருக்குத்தான், எப்போதுதான் அவர் போடும் திட்டம், அவராகச் சொல்லுமுன் தெரிகிறது?