உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

களிலே மட்டுமல்ல, திட்டங்களிலேயே கோளாறு இருக்கிறது என்று கூறுகிறார்.

தொழில் மந்திரியாக உள்ள சஞ்சீவய்யா, “திட்டங்களினால் ஏன் தக்க பலன் கிடைக்கவில்லை என்பதைக் கண்டறியவேண்டும். நாம் இதுவரை, திட்டங்கள் வெற்றிபெற, பணம் வேண்டும், மூலப்பொருள் வேண்டும் என்பது பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்துவிட்டோம்; ஏமாந்துவிட்டோம்; திட்டங்கள் வெற்றிபெற மக்களிடம் இலட்சிய ஆர்வம் எழவேண்டும்—வயலில் உழைப்பவன், தொழிற்சாலையில் வேலை செய்பவன் எனும் எவருக்கும் திட்டம் வெற்றிபெற நான் பாடுபடுவேன், திட்டத்துக்காக நான் உழைத்தால், எனக்கு இன்னின்னது கிடைத்தாலும் என் வாழ்க்கை வளமாகும் என்ற நம்பிக்கை எழவேண்டும், அவ்விதமான ஆர்வம் வேண்டும். அவ்விதமான ஆர்வம் எழத்தக்க விதமாகத் திட்டங்களின் விளைவுகள் இருந்திடவேண்டும். அது இல்லாததால்தான், திட்டங்கள் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்கவில்லை” என்று பேசுகிறார்.

திட்ட அமைச்சராக இருந்த நந்தா அவர்களோ, திட்டத்திலே தவறு இல்லை. முறைகளிலே குறை இல்லை, சத்தியம் கெட்டுவிட்டது. இதோ அழைக்கிறேன் சாதுக்களை, அவர்கள் அதர்மத்தை அழித்தொழித்துத் தர்மத்தை நிலைநாட்டுவர் என்று உபதேசிக்கிறார்.

லால்பகதூர், நிலைமைகளைக் கவனித்த பிறகு, சரி சரி, பெரிய பெரிய தொழில்களிலே போய்ச் சிக்கிக்கொள்ள வேண்டாம்; இனி, திட்டத்தில் உடனடியான பலன் தரத்தக்க, மக்களின அன்றாடத் தேவைப் பொருள்களைப் பெற்றுத் தரத்தக்கவைகளிலேயே கவனம் செலுத்த வேண்டும் எனறு கூறுகிறார்.

திட்டத்துக்காகவோ பெரும் பொருள் செலவாகிவிட்டது; வெளிநாடுகளில் பெரிய அளவு கடன் வாங்கியாகிவிட்டது; மக்கள் மீது தாங்க முடியாத வரிச்சுமையை ஏற்றியாகவிட்டது விளம்பரமோ அமோமாகச் செய்தாகி விட்டது; விழாக்களோ ஆடம்பரமாக! கடைசியில் உட்கார்ந்து பேசுகிறார்கள் ஒவ்வொருவராக, முடிவிலே நாட்டுக்குத் தெரிவிக்கிறார்கள்.