உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

உணவுப் பண்டங்களைப் பதுக்கி வைக்கும் கொடுமை ஒழிக்கப்படவில்லை.

வெளிநாட்டானிடம் ‘சோறு’ கேட்கும் பஞ்சநிலை போகவில்லை.

ஏறிக்கொண்டேபோகும் விலைகளைக் கட்டுப்படுத்த முடிய வில்லை.

பேச்சுமட்டும் இருக்கிறது, “மூச்சுவிடாதே! முடி என் தலையில்! அது கீழே இறங்காது!!” என்று.

எந்தப் பிரச்சினையை இவர்கள், எவரும் கண்டு வியக்கத்தக்க முறையிலே தீர்த்துவிட்டார்கள், எம்மைக் காட்டிலும் தகுதிபடைத்தவனும் இருக்கிறானா நாடு ஆள!!—என்று ஆர்ப்பரிக்க.

தம்பி! உண்மை இதுதான். 17-ஆண்டுகளாகியும், சோற்றுப் பிரச்சினையைக் கூடத்தீர்க்க முடியாத ஒரு ஆட்சியை, மக்கள் எப்படி ஆதரிப்பார்கள்? அந்த மக்களிடம், கழகம் கொண்டுள்ள நேசத் தொடர்புநாளுக்கு நாள் வளருகிறதே. எதிர்காலம் எப்படியோ என்ற எண்ணம் தோன்றுகிறது; தோன்றும்போது மனக்குமட்டல் ஏற்படுகிறது; அதுதான் காரணம்,

பைத்தியக்காரர்கள்
பகற்கனவு காண்பவர்கள்

என்று நம்மை ஏசுவதற்கு.

இந்த முறையிலே, தம்பி! பார்த்திடுவாயானால், அந்த ஏசல் கேட்டு எரிச்சல் ஏற்படாது நமது கழக வளர்ச்சிகண்டு, அதனைக் குலைத்திட எடுத்துக்கொண்ட முயற்சிகள் முறிந்து போகக்கண்டு, மனக்குமட்டல் கொண்டு, காங்கிரஸ் பெருந்தலைவர்கள் உள்ளனர் என்ற உண்மை புரியும்; புரிந்திடும்போது மேலும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றிக்கழகத்தை வலிவும் பொலிவும் மிகுந்ததாக்குவோம்; பொதுமக்கள் காணட்டும் நமது சீரிய பணிகளை! பொதுமக்களின் ஆணைகேட்டு நடந்திடுவோம்!! என்ற உறுதி பிறந்திடும்.

உணவு, உடை, குடியிருப்பிடம், எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக் கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலவில்லை