92
இருந்தால்; மாதம் 150, வருடத்துக்கு 1800. ஐந்து வருடத்துக்கு 9000! இதன்றிப் படி வேறு இருக்கிறது. இந்த ஐந்து வருஷத்தில் ஒரு பஸ் ரூட்டாவது கிடைக்காதா! எத்தனை மந்திரிகள், அதிகாரிகள் தொடர்பு ஏற்படும்! போதுமே! முன்னாலே போட்டுப் பின்னாலே எடுக்க வேண்டியதுதானே என்றார். தம்பி! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எனக்கு மட்டுமா, இப்போது உனக்குத் தூக்கிவாரிப் போடப் போகிறது பாரேன்! சொன்னபடியே செய்து காட்டினார் அந்தப் புள்ளி!!
சொன்னதற்கு மேலும் செய்து காட்டிவிட்டார்! காங்கிரசில் சேர்ந்து தலைவராகிவிட்டார்!
இப்போது அவர் மகாநாட்டுத் திறப்பாளர், அமைச்சர், பேச்சாளர்! அவர் அழைக்கிறார், அமைச்சர் செல்கிறார்; அவர் கேட்கிறார், அமைச்சர் அக்கறை காட்டுகிறார்! பெரிய காங்கிரஸ் தலைவராகிவிட்டார். முடிந்தது பாரேன்! இவ்வளவு எளிதாக எப்படி ஏற்படமுடிகிறது இந்த உறவு? இதயம் இருக்கட்டும் ஒருபக்கம் என்று இருசாராரும் இருந்து கொள்வதால்.
இப்படிப் பட்டவர்களின் முகாம், இன்றைய காங்கிரஸ். இவர்களின் துணையுடன் நடத்தப்படும் தேர்தலின் போது, மக்களின் இதயம் நமது பக்கம். ஆகவே வெற்றி நமக்குத் தான் என்று எண்ணி ஏமாறக்கூடாது. விழிப்புடனிருந்து, தேர்தலின்போது சுறுசுறுப்பாகப் பணியாற்றும் விந்தை மாந்தர்களைக் கவனித்தாக வேண்டும். அவர்களில் சிலரை, அடுத்த கிழமை காட்டுகிறேன்.
25-4-65
அண்ணன்,
அண்ணாதுரை