மாபாதகத்திலே ஒண்ணல்லவா குடின்னு பஜனைப் பேச்சுப் பேசறாங்க...
மண்டலம்:– எதுவரையிலே பேசுவாங்க? உங்களைப் போன்றவங்க, விவரம் தெரிந்தவங்க காங்கிரசிலே சேராமப்படிக்கு ஒதுங்கி இருக்கிறவரைக்கும். உங்களைப் போன்றவங்க, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து பாடுபடணும்... விளக்கமாப் பேசணும்... இந்த மாதிரிச் சட்டமெல்லாம் வீணா பண நஷ்டத்தைத்தான் உண்டாக்கும் என்று தைரியமாப் பேசணும்.
மு. க. க:– பேச விடுவாங்களா? மதுவிலக்கு, மகாத்மாவோட திட்டம்; அதை எதிர்த்துப் பேசுவதற்கு எந்தக் காங்கிரஸ்காரருக்கும் உரிமை கிடையாது என்று உருட்டி மிரட்டிப் பேசுவார்களே...
மண்டலம்:– அதுதான் முடியாது என்கிறேன். ஜனநாயகம் நடக்குது ஜனநாயகம். தெரியுதுங்களா? ஜனநாயக தர்மப்படி, அவரவர்களும் தமக்குச் சரி என்று பட்ட விஷயத்தைப் பற்றி அச்சம், தயை. தாட்சணியம் இல்லாமப்படிக்குப் பேசலாம்......
மு. க. க:– கள்ளுக் கடைகளை மறுபடியும் திறக்க வேணும்னு கூடவா பேச முடியும்? அனுமதிப்பார்களா.........!
மண்டலம்:– அனுமதி மறுக்க யாருக்கு உரிமை! ஒருவருக்கும் கிடையாது. கேட்கலாமே நீங்க, என்னப்பா நான் பொருளாதாரக் காரணத்துக்காகவும், உழைப்பாளிகளுடைய நன்மைக்காகவும் கள்ளுக் கடைகளை மறுபடியும் திறக்க வேண்டும் என்று சொன்ன உடனே, சரமாரியா கண்டனத்தை வீசுகிறீங்களே—காங்கிரசுக்கு இது ஆகாது அடுக்காது என்றெல்லாம்; அதே காங்கிரஸ்தானே புதுச்சேரியிலே அரசாளுது—அங்கே கள்ளுக்கடை கோலாகலமாக இருக்குதே...காந்திராஜ்யம் கடலூருக்கு மட்டுந்தானா, காரைக்கால் புதுச்சேரிக்குக் கிடையாதான்னு கேட்கலாமே. என்ன பதில் சொல்ல முடியும். உண்மையைச் சொல்லட்டுமா; உங்களைப்போல ஒரு பத்துப் பேர் இது போலப் பேசினா, மதுவிலக்குச் சட்டம் தன்னாலே போய்விடும்...