50
செய்ய வேண்டும்? குமரப்பனிடம் பேரம் பேசிக் கொண்டாகிலும் அவனை வீழ்த்துவதுபோல பாவனையாகவாகிலும் செய்து காட்டிவிட்டு, எங்கே எட்டுப் பவுனில் தோடா என்று கேட்கவேண்டும். ஆனால்...!
★
ஆனால், முதலமைச்சர் பக்தவத்சலனார் இருக்கிறாரே, அவர் நீ எதிர்பார்க்கிறபடி நடந்துகொள்ள மாட்டார் போலிருக்கிறது.
எலுமிச்சம் பழத்தை மரியாதைக்காக நீ கொடுத்ததும் அந்தப் பெரியவர், உருட்டு விழி காட்டி மிரட்டும் குரல் எழுப்பி, “ஏடா! என்னைக் கேலியா செய்கிறாய்! என்ன துணிவு உனக்கு, எனக்கு எலுமிச்சம் பழம்தர! என்ன உன் நினைப்பு! யார் என்று என்னை எண்ணி விட்டாய்! எனக்குத் தலை கிறுகிறுப்பு, பித்தம், பைத்யம் என்று காட்டத்தானே, எலுமிச்சம் பழம் கொடுக்கிறாய்? இதைத் தலையில் தேய்த்துக்கொண்டு நீராடினால் பித்தம் குறையும், புத்தி தடுமாற்றம் போய்விடும் என்று குத்திக்காட்டும் செயலல்லவா இது. எலுமிச்சம் பழம் எனக்கு! ஏடா பயலே! என்ன திமிர் உனக்கு!!—என்று பேசினால் என்ன நிலை ஆவாய்? திணறிப் போவாய்! முதலமைச்சர் பக்தவத்சலம் தமது போக்காலும் பேச்சாலும் நம்மைத் திணற அடிக்கிறார் என்று தோன்றுகிறது. மரியாதைக்குத் தந்த எலுமிச்சம் பழத்தை, கேலிக்குத் தந்தது என்று தப்பர்த்தம் செய்துகொண்டு ‘தகதக’வென்று ஆடிடும் பெரியவர் போல, நான் சொல்வதைத் தப்பர்த்தம் செய்து கொண்டு, பதை பதைக்கிறார், படபடக்கிறார், பலப்பல பேசுகிறார்.
சிறுவனிடம் பழம் கொடுத்ததும், இது என்ன சிறுமலையா, பூவனா, நேந்திரமா என்று கேட்டால், பரவாயில்லையே சிறுவன் கெட்டிக்காரன் என்று எண்ணிக் கொள்வாய். அந்தச் சிறுவனோ, பழத்தை ஆவலுடன் வாங்கி உரித்து, சுளையை ஜன்னல் வழியாக வீசி எறிந்து விட்டு, தோலைத் தூக்கிக்கொண்டு ஓடோடிச் சென்று, “அம்மா! அம்மா! பார்! பார்! மாமா கொடுத்தது, பாரம்மா!” என்று கூவுகிறான். வாழைப்பழத்தில் சுளை சுவைத்திட, தோல் மாட்டுத் தொழுவத்துக்கு என்ற விவரமும் புரியவில்லை சிறுவனுக்கு. சிறுவனுக்கே கூட