8
பட்டதில்லை என்று எவரும் வியந்து கூறத்தக்கதான ‘பொருட் காட்சி’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும் ரஷியாவும் பிரிட்டனும் பிறநாடுகளும், தத்தமது தொழிற்திறமையை, விஞ்ஞான முன்னேற்றத்தை விளக்கிடும் வகையில் பொருள்களைக் காட்டியும், பொருள்செய் முறைகளை விளக்கியும் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. காண்போர், முற்போக்கு நாடுகள் தொழில் துறையிலே எவ்வளவு ஆச்சரியகரமான முன்னேற்றமடைந்துள்ளன என்பதைப் பாராட்டுகின்றனர். நேரு பண்டிதர், இந்தப் பொருட்காட்சியின் தத்துவத்தை விளக்கி விரிவாகப் பேசியுமிருக்கிறார்; இலட்சக்கணக்கான மக்கள் சென்று காண்கின்றனர்.
கண்ணாடி மனிதன் என்றோர் காட்சிப் பொருள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
கண்ணாடியால் செய்யப்பட்டுள்ள மனித உடல்! மனித உடலுக்குள்ளே என்னென்ன உறுப்புக்கள் என்னென்ன முறையிலே அமைந்து, எவ்வகையிலே இயங்குகின்றன என்பதை, கண்ணாடி மனிதன் மூலம் பாமரனும் கண்டறியலாம். இரத்தக் குழாய்கள் தெரிகின்றன. இரத்தம் எப்படி எப்படி ஓடுகிறது என்பது காட்டப்படுகிறது. இதயத் துடிப்பு, மூளையின் அமைப்பு, நரம்புகளின் படைப்பு — எல்லாம் தெளிவாகத் தெரிகிறது, கண்ணாடி மனிதன் மூலம் !
பொருட்காட்சியிலே இந்த விஞ்ஞானப் பாடம் அளிக்கப் பட்டு வரும் இதே நேரத்தில் ‘பாரதத்தின்’ மற்றோர் பகுதியில், வேத காலத்து இரதங்கள் ஓடுகின்றன ! அதை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து ஆரவாரம் செய்கின்றனர்.
விஞ்ஞான அறிவளிக்கும் பொருட்காட்சியை நேரு பண்டிதர் திறந்து வைக்கிறார்—இந்த வேதகாலக் காட்சியைத் துவக்கிட, பம்பாய் கவர்னர் மேதாப் முன் வருகிறார்.
உலகில் சாந்தி சமாதானம், சுபீட்சம், ஆகியவை ஏற்பட, ஐ. நா. சபை, நால்வர் மாநாடு, ஜினிவா மந்திராலோசனை, பாண்டுங் முயற்சி, நேருவின் பஞ்சசீலம், இவை ஒன்றும் முறையாகாது — கோடிக் கணக்கான மக்கள் சமாதானம் கோரலாம், பல்லாயிரக் கணக்கான மைல்கள் பறந்து சென்று பண்டிதர் உலக சமாதானம் பற்றி உள்ளத்தை உருக வைக்கலாம், புல்கானின் வாக்களிக்கலாம், சோ இன் லாய் சமரசம் பேசலாம், மாலடோவ் மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கலாம், அமெரிக்காவும் சமாதானம் பேசலாம் ஆனால் இவையெல்லாம் உலக சமாதானத்தை ஏற்படுத்தா—உலகிலே சாந்தி நிலவ, இதோ நாங்கள் தொண்டு புரிகிறோம் பாரீர், என்று கூறுவது