உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

கவிதா சக்தியையும் வேண்டுமென்றே எங்கோ ஒளிந்திருக்கச் செய்துவிட்டு, குப்பை என்று சொல்லத்தக்க இந்தக் கவிதையை இயற்றினீர்கள்! நல்ல கவிதையை மட்டும் அல்ல இப்படிப் பட்டதையும் எழுத முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதில், மன்னா! தாங்கள் மகத்தான வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்க நற்கவிதை! ...என்றுகூறித் தப்பித்துக்கொண்டானாம் அந்தக்கவிஞன்!

இன்றைய ஆட்சியின் விளைவுகள் பற்றி எழுதிடும் பலர், இதுபோல, உண்மையை அப்பட்டமாகக் கூறிடின் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, பஞ்சத்தைப் பற்றாக் குறை என்றும், வேதனையைச் சோதனை என்றும், கடன் சுமையை உதவித்தொகை என்றும் பட்டாடை உடுத்திக் காட்டுகின்றனர்.

துதிபாடகர்களின் துந்துபி ஒரு புறம், அறிந்தோர் அச்சம் காரணமாகக் காட்டிடும் தயக்கம் மற்றோர்புறம், எடுத்துரைப்போரும் இலைமறை காய் என்ற முறையில் உண்மையைக் காட்டிடும் தன்மை பிறிதோர் புறம் என்றுள்ள இந்தச் சூழ்நிலையை நமது சுறுசுறுப்பான பிரசாரம் மட்டுமே மாற்றிட முடியும்; மக்கள் தெளிவு பெற்றிடச் செய்யமுடியும்.

அதற்குத் தம்பி! நமது பேச்சிலும் எழுத்திலும் சூடு அல்ல, ஒளிதான் அதிகம் இருக்கவேண்டும்.

அந்த ஒளியினைத் தந்திடும் வல்லமை உனக்கு உண்டு என்பதால்தானே தம்பி! நான் அன்புடன் அழைத்த வண்ணம் இருக்கிறேன், ஒளிபடைத்த கண்ணினாய்! வா! வா! வா! என்று.


16-10-'66

அண்ணன்,
அண்ணாதுரை


அ. க. 7—8