உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

தம்பி,

காங்கிரஸ் நண்பரொருவர் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘ஆமாம் அண்ணாத்துரை! என்ன நீங்கள் கூட அமெரிக்காவைத் தாக்க ஆரம்பித்து விட்டீர்களே?’ என்று கேட்டார். நான் சிறிதளவு விவரம் புரியாமலிருக்கக்கண்டு அவரே விளக்கமும் தந்தார்; “அதாவது அமெரிக்காவிடமிருந்து இந்தியா உதவி பெறுவதைக் கண்டிக்கிறீர்களே—கடன் சுமை ஏறுகிறது என்றும் இந்தியாவின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்து விட்டது என்றும் பேசுகிறீர்களே? இது என்ன புதிய போக்காக இருக்கிறதே” என்று கேட்டார்.

நீண்ட நேரம் பேசவேண்டுமே என்பதனால், அவருடைய கேள்வி பற்றிக் கவலை காட்ட வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு, நான் சுருக்கமாக, “ஆமாம்! அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்து விட்டிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்; அது தீதானது என்றும் எண்ணுகிறேன்; அதனால்தான் கண்டிக்கிறேன். ஆனால், இது புதிய போக்கு அல்லவே!” என்று கூறினேன், விவாதம் வளராது என்ற நினைப்புடன்.

நண்பர் விடவில்லை; “இல்லை! இல்லை! இப்போது தான் இந்தப் போக்கு ஏற்பட்டிருக்கிறது; அதற்குக் காரணமும் எனக்குத் தெரியும்; எல்லாம் “சகவாசதோஷம்” என்றார்.

“அதென்னய்யா சகவாசதோஷம்! பெண்களுக்கு என்னவோ செவ்வாய்தோஷம் என்று ஜோதிடர்கள் கூறுவார்களே, அதுபோல இருக்கிறதே உமது பேச்சு!” என்று நான் கூற, நண்பர், “பெண்களிலே சிலருக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைக்கூடப் போக்கிவிடலாம், ஆனால் இந்த சகவாசதோஷம் இருக்கிறதே அது இலேசிலே போகாது” என்று சற்று சூடாகவே கூறிவிட்டு, சுற்றி வளைத்துப் பேசுவானேன், உங்கள் கழகம் கம்யூனிஸ்டு கட்சியுடன் ‘சரசமாட’ ஆரம்பித்ததால் ஏற்பட்டதுதான் இந்த ‘அமெரிக்க எதிர்ப்பு’—சகவாசதோஷம் தான் காரணம்” என்று கூறிவிட்டுக் கடுமையான பார்வையை என்மீது செலுத்தினார்.

“ஓஹோ! இப்படி ஒரு கருத்து உலவுகிறதா! நண்பரே! இதை எடுத்துக்காட்டியதற்கு நன்றி. நாங்கள் அமெரிக்கா-