உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

திடும் இதழ்களை, ஏந்தித் தீரவேண்டிய படைக்கலன் என்று கொண்டிட வேண்டும். கழக இதழ்கள் மூலம் பெற்றிடும் பலன், இதனால் தனித்தன்மை வாய்ந்ததாகிறது.

எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், அது குறித்து சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் அதே இதழ்கள், சூடு தணிந்ததும், வேறு திசையிலே மக்களின் கவனத்தைத் திருப்பி விட்டு விடுவதிலே முனைவதனைக் காணலாம்.

அதனை விடத் துணிவாகச் சில இதழ்கள், கண்டனம் வெளியிட்டுவிட்டு, சின்னாட்களுக்குப் பிறகு ‘கனம்’கள் தந்திடும் கருத்துக்களை அவை முன்னம் தாம் வெளியிட்ட கண்டனத்துக்கு முற்றிலும் ஒத்து வராது என்று தெரிந்திருந்தும் — வெளியிட்டு பிரச்சினையை மடியச் செய்து விடுகின்றன

இந்த இதழ்கள் மட்டும், அறப்போர் மனப்போக்குடன், நல்லாட்சி கண்டாக வேண்டும் என்ற துடிப்புடன் பணிபுரிந்திடின், ஜனநாயகம் எவ்வளவோ அளவு செம்மைப்பட்டிருந்திருக்கும். ஆனால், அந்த முறையில் அவைகள் வேலை செய்யவில்லை.

அதனால் கழக இதழ்கள், வசதியும் வாய்ப்பும், வல்லமையும் அனுபவமும் கொண்ட மற்ற இதழ்கள் செய்திருக்கக்கூடிய—ஆனால் செய்யாது விட்டுவிட்டுள்ள—வேலைகளையும் சேர்த்துச் செய்திட வேண்டி இருக்கிறது. சுமை அதிகம்! ஆகவே பாடு அதிகமாகிறது.

நீண்ட பழங்காலந் தொட்டே—பணம்—பதவி—எனும் எதன் காரணமாக ஏற்படுவதாயினும்—செல்வாக்குக் கொண்டவர்களின் சீற்றத்துக்கு அஞ்சுவதும், புன்னகைக்கு விரும்புவதும், நம் நாட்டிலே இயல்பு ஆக்கப்பட்டு விட்டிருக்கிறது.

மந்தம், நிதானம் ஆக்கப்பட்டுப் பராட்டப்படுவதும், கஞ்சத்தனத்தை சிக்கனம் என்று புகழ்வதும், துடுக்குத்தனத்தை அஞ்சாமை என்று கூறிப் பாராட்டுவதும், களியாட்டத்தில் ஈடுபாடு இருந்திடின் அதனைக் கலை ஆர்வம் என்றும், எவரையும் மதித்துக் கலந்து பேசிடாத போக்கை, சுயசிந்தனை என்றும், அகம்பாவத்-