உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197

“நீண்ட காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டிய சமுதாய சீர்திருத்தத்துக்கான முற்போக்கான சட்டங்கள், பாராளுமன்றத்திலே கொண்டுவரப்படும் போதெல்லாம், காங்கிரஸ் உறுப்பினர்கள்தான், முன்னால் நின்று அவைகளை எதிர்த்து வந்தனர். என் உள்ளம் வெதும்புகிறது.”

எப்படி இருக்கிறது, தம்பி! பத்தாம்பசலிகள் என்று நான் குறிப்பிட்டேனே, தவறா? முற்போக்கான சட்டதிட்டங்கள் வருகிறபோது, காங்கிரசில் இருந்துகொண்டு எதிர்க்கிறார்கள்— நியாயமா? இவர்களா நாடாளத் தகுதிபெற்ற கட்சியினர்! இப்படிப்பட்டவர்களைக் கொண்டுள்ள கட்சியா மக்களை வாழ வைக்கும் கட்சி?

என் உள்ளம் வெதும்புகிறது என்று அம்மையார் மட்டுமா, அறிவுத் தெளிவுள்ள, முற்போக்குக் கருத்துள்ள, அனைவரும் தான் கூறவேண்டி இருக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட நயவஞ்சகர்களில் இருந்தல்லவா ‘ஆளவந்தார்கள்’ பொறுக்கி எடுக்கப்படுகிறார்கள்.

அவர்களிலே பலர் கதர் கட்டுகிறார்கள். ஆனால், உள்ளூர வகுப்புவாதக் கட்சிகளான, ஜனசங்கம், இந்துமகா சபை, ஆர். எஸ். எஸ்—போன்றவைகளிடம் அன்பும் அபிமானமும் கொண்டுள்ளனர்; அவைகளுக்குக் கட்டுப்படுகின்றனர்.

கட்டுவது கதர்! கனிவு காட்டுவது காட்டுமுறை விரும்பும் கட்சிகளுடன்! கதர் கட்டுவது எதற்கு? ஊராரை மயக்க! மகாத்மாவின் தொண்டர்கள், தூயவர்கள் என்று பிறர் நம்பிக்கொள்ளும்படி செய்ய! ஆனால் உண்மையில் வகுப்புவாதக் கட்சிகளுடன் குலவுகிறார்கள்.

தம்பி! கபடர்கள் என்று கூறினேன்—தவறா?

பணம், பிடுங்கிகள் என்று நான் குறிப்பிட்டது. பலருக்குச் சற்றுக் கடுமையான மொழி என்று தோன்றக்கூடும். ஆனால், பொருத்தமில்லாமல் கூறிடவில்லை என்பதை அமைச்சரின் மற்றோர் மணிமொழி கேட்டால், புரிந்துகொள்வார்கள்.

காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் கமிட்டிகளும் பணத்தை நாடும் போக்கு, வளர்ந்தபடி இருக்கிறது. விடுதலைப் போரிலே வீரத்தியாகம் புரிந்தவர்களைப் புறக்கணித்துவிட்டுக் காங்கிரஸ் கமிட்டிகளுக்குப் பணம்