199
தேர்தலுக்குக் காங்கிரஸ் அபேட்சகர்களாக நிறுத்தப்பட இருக்கிறார்களாம். பயங்கரமாக இருக்கிறது என்கிறார், இலட்சுமி மேனன்.
மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல, எங்கும் இதேதான்.
பணம் இருக்கவேண்டும் நிரம்ப! எப்படிச் சேர்த்த பணமாக இருந்தாலும் சரி! கள்ளமார்க்கட் பணமாக இருந்தால், மிக நல்லது. ஏனெனில், கணக்குக்காட்ட வேண்டிய அவசியமில்லாமல் தேர்தலில் செலவழிக்கலாம். பண்பு இருக்கிறதா? பொதுத்தொண்டாற்றிப் பயிற்சி இருக்கிறதா? சட்டமன்றத்திலே பணிபுரியும் தகுதி இருக்கிறதா? இவைகளைக் கவனிக்கவே இல்லை! பணம் உண்டா—! ஏராளமாக! தாராளமாகச் செலவிடத் தயாரா? அப்படிப்பட்டவர்தான் வேண்டும்? எதற்கு? துறவியாக வாழ்ந்து, தூய்மைக்கும் வாய்மைக்கும் மதிப்பளித்த மகாத்மா வளர்த்த கட்சியைக் காப்பாற்ற! வெட்கக்கேடு இதைவிட வேறு உண்டா? ஆனால், நாட்டிலே இன்று இதைத்தானே காண்கிறோம். ஆங்காங்கு, தேர்தலில் வேட்பாளர்களாகக் காங்கிரசால் நிறுத்திவைக்கப் பட்டிருப்பவர்களின் தகுதி, திறமை, பண்பு, பயிற்சி, முன்னாள் தொடர்பு, இவைகளைச் சற்றுப் பார்க்கச் சொல்லேன், தம்பி!
தம்பி! பார்க்கச் சொல்லேன் என்று நான் கூறுகிறேனே தவிர, இப்போதே மக்கள் இதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது, எனக்கும் தெரியாமல் இல்லை.
அதுமட்டுமல்ல, உண்மைக் காங்கிரஸ் தொண்டர்கள் உளம் வெதும்பித்தான் கிடக்கிறார்கள். எவரெவர் ஊர்க்குடி கெடுப்பவர்களோ அவர்களெல்லாம் காங்கிரசில் இழுத்துப் போடப்பட்டு, அபேட்சகர் ஆக்கப்பட்டு, உலா வருகின்றனர். அவர்களுக்குக் கொடிபிடிக்கும் காலமும் வந்ததே என்று வெட்கித் தலைகுனிகிறார்கள் விவரம் தெரிந்த காங்கிரஸ்காரர்கள். களத்துமேடு கால்படியாவது கிடைக்காதா என்று அலையும் பேர்வழிகள்போலக், கதர்போட்டுக்கொண்ட கனவான்கூடச் சென்று ‘காசு’ பறிக்கலாம் என்று உள்ளவர்களும் உள்ளனர். ஆனால், காங்கிரசில் இழுத்துப்போடப்பட்டுள்ள பணக்காரர் வீட்டு வேலையாட்கள்கூடக் காங்கிரஸ் கட்சியை இன்று மதிக்க மறுக்கிறார்கள்—இவ்வளவு தரம் குறைந்துபோய்விட்டதே இந்தக் கட்சி என்று.