உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

போகிறார்கள். பாபம்! அதிலும், நான் குறிப்பிடுவது. இந்திய துரைத்தனத் தலைவராக நேருபண்டிதர் அமர்ந்தபிறகு ஆற்றிய உரைகள் அல்ல! அன்றோர் நாள்! விடுதலை இயக்கத்தின் முன்னணி நின்று, இலட்சிய முழக்கமிட்ட நாட்களில்! “கனவு காண்கிறான் இந்தச் சீமான் மகன்!” கற்றதைக் கதைக்கிறான்! கவைக்குதவாதன் பேசுகிறான்! பரந்த சாம்ராஜ்யத்துக்கு அதிபனாக உள்ள வெள்ளையனைப் ‘பயமறியாப் பருவம்’ காரணமாக எதிர்க்கிறான் — நடக்கிற காரியமா இது?”—என்று கண் சிமிட்டியபடி, கேலிப் புன்னகை தவழ, ‘மேதைகளும்’, ‘அனுபவக் களஞ்சியங்களும்’, பேசிக் கொண்டிருந்த நாட்கள்! அந்த நாட்களில், பண்டிதர் பேசியவற்றினைப் படித்துக்கொண்டிருந்தேன்—இன்று கிடைத்த அரசியல் செல்வாக்கைச் சுவைத்தபடி, தேசியத் தோழர்கள், உரத்த குரலிலே முழக்கம் எழுப்பிக்கொண்டு, ஊர்வலம் வந்தபோது. எப்படிப்பட்ட நேரு தெரிந்தார் என்கிறாய், தம்பி! எழுச்சியூட்டும் நேரு! தளைகளைப் பொடிப் பொடியாக்கி விடவேண்டும் என்ற துடிப்பினை எவரும் கொள்ளத்தக்க வீரம் ஊட்டும் பேச்சாளர்! அச்சம், தயை, தாட்சணியம், அருகே நெருங்கமுடியாத நிலையினர்! மாற்றானிடம் மண்டியிடுபவன், மாபெரும் துரோகி! பேரம் பேசுபவன் கோழை! குழைபவன், கோமாளி! திகைத்துக் கிடப்பவன், உருவில் மட்டுமே மனிதன்! — என்று, பண்டிதர் நாடெங்கும் இடிமுழக்கமெனக் குரல் கொடுத்துச், சோர்ந்த உள்ளங்களைத் தட்டி எழுப்பிப், படை திரட்டிக்கொண்டு வந்த நாட்களிலே, அவர் பேசியவை, இன்றும், என்றென்றும், விடுதலைக் கிளர்ச்சியிலே, தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ள, எவருக்கும் வீர உணர்ச்சியை ஊட்ட வல்லவை!!

“ஆனாலும்”—“என்ன செய்வது” “இப்போதைக்கு இதுதான்”—இயன்ற அளவு தானே”—படிப்படியாக”— என்ற சொற்கள் பேச்சிலே இடம் பெறாத நாட்களைக் குறிப்பிடுகிறேன். உலைக்களத்திலிருந்து பழுக்கக் காய்ச்சப்பட்ட நிலையில் வெளியே எடுக்கப்படும் இரும்புக் கம்பியைப் பார்த்திருப்பாயே, தம்பி! அந்த நேரு!! ஆமாம்! இப்போது உள்ள பட்டுக் குஞ்சம் கட்டப்பட்டுப் பளபளப்பான உறையில் இடப்பட்டுள்ள உடைவாள் போன்ற நேரு அல்ல! சந்தனப் பொதிகையில் சிந்துபாடி விந்தைகள் செய்திடும் பூங்காற்று! மின்சார விசிறிதரும் காற்று அல்ல!! மரத்திலே பழுத்து, காற்றுக்கு ஆடிடும் கனி! கீழே விழுந்து, ஒரு பக்கம் கறுத்துப் போன நிலையிலே உள்ள பழம் அல்ல! ‘பாரதத்தை’க் கட்டிக்