பக்கம்:தம்பியர் இருவர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் I 27’’

முதல் முறையாகக் கைகேயி இராமனை மைந்தன் என்று இப்பாடலிலேதான் குறிக்கிறாள். ஏன் தெரியுமா? பரதனிடம் பேசும் பொழுது இதுவரை இராமனிடம் பாராட்டிய உரிமையை விட்டு விட்டதுபோலப் பேசினால், அவன் சினம் இன்னும் மிகுதிப்படுமன்றோ? எனவே, ‘மைந்தனை என்று குறித்தாள். மேலும், தசரதனுடைய சாவிற்குத் தான் நேரான காரணி அல்லள் என்பதை அவள் குறிப்பால் பெற வைக்கிறாள். வரங்கொண்டு இராமனைக் காட்டிற்கு அனுப்பியவளும், அரசைப் பரதனுக்கு ஆக்கியவளும் தானே என்பதை முன் இரண்டு அடிகளிலும் குறித்துவிட்டாள்.

பின் இரண்டு அடிகளில், அச்செயல், பொறுக்காமல் தசரதன் தானே உயிரை விட்டான், என்று கூறுகிறாள். பொறுக்க முடியாமல் உயிர் நீங்கினான் என்று கூறுவதற்குப் பதிலாகத் தன் உயிர் நீக்கினான்,' என்று அவள் கூறுவது கவனித்தற்குரியது. ஏறத்தாழத் தசரதன் தற்கொலை செய்துகொண்டான் என்றே குறிப்பிடுகிறாள் கைகேயி. அவள் கூறிய இந்த நுணுக்கம் பரதன் செவிகளிற் புகவே இல்லை. அவன் தன்னை மறந்த நிலைக்குச் சென்று விட்டான் முன் அடிகளிற் கூறியவற்றைக் கேட்ட மாத்திரத்திலேயே. தன் உயிர் என்றும், வழிபடு தெய்வம் என்றும் தான் கருதும் இராமனை தன்னைப் பெற்ற தாயே காட்டிற்கு அனுப்பினாள் என்பது செவியில் விழுந்த வுடன் அவன் தன்னை மறந்துவிட்டான். தந்தையின் மறைவு குறித்து வருந்தும் பரதன் இப்பொழுது இல்லை. இப்பொழுது கைகேயியின் மகன் அல்லன் எதிரில் நிற்பவன்; தசரதன் மகனும் அல்லன். இராமனுடைய பத்தன் நிற்கிறன். அவன் தெய்வத்தை ஒருவர் வெருட்டிவிட்டார், அது யாராயிருப்பினும் சரி! அவ்வாறு வெருட்டியவர் அவனுடைய பகைவரே. இராமனைப்பற்றி அவன் என்ன நினைத்திருந்தான்?