பக்கம்:தம்பியர் இருவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தம்பியர் இருவர்

சொற்களே பேசினான். என்றாலும், என்ன? அவனுடன் பலகாலம் அறிந்து பழகியவன் போலச் சில கருத்துக்களை இராமனிடம் கூறுகிறான். இது எவ்வாறு முடிந்தது? புறத் தோற்றத்திற்கும் அகப்பண்பிற்கும் நேர் முரணாய் உள்ள பாத்திரப் படைப்பாகும் இப்படைப்பு. இது பலாப்பழித் தைப் போலப் புறப்பகுதி முள்ளாகவும் சுரசுரப்பாகவும் இருக்கிறது. காண்பதற்குப் பலாப்பழம் வெறுப்பைத் தருவதாயினும், அதனைப் பொறுத்துக் கொண்டு உள்ளே நோக்கினால் இனிய சுளைகள் காணப்படுன்றன அல்லவா? அதே போலக் குகனது புறத்தோற்றத்திற்கு முற்றிலும் மாறாக அவனுடைய அகமும் பண்பாடும் காட்சி நல்கு கின்றன.

இதனைவிடச் சிறப்பான செயல் என்னவெனில், இலக்குவன் இவ்வுண்மையைக் கண்டு பிடித்ததாகும். எத் துணை அறிவாற் சிறந்தவர்களையும் பிறருடைய புறத் தோற்றம் ஒரளவு ஏமாற்றி விடுகிறது. மிகச் சில கூர்த்த மதியினரே இப்புறக் காட்சியால் மயங்கி விடாமல், உள்ளே ஊடுருவி நோக்கி, உண்மை காண்கின்றனர். அத்தகைய கூர்த்த மதியினருள்ளும் தலைசிறந்தவனாய் இருக்க வேண்டும் இலக்குவன் என்று உறுதியாகக் கூறலாம். தன்னைப் பெற்றெடுத்த தாய் அழகியா அல்லளா என்று யாரும் சிந்திப்பதில்லை. அதே போன்று குகனது புறத் தோற்றம் கவனிக்கப்பட வேண்டாதது என்பதைச் சுட்டிக் காட்டுவான்போல இளையவன் இராமனிடம் 'தாயினும் நல்லன்” என்று கூறுகிறான்.

தாய்போல உணவு தந்தது

குகனுடைய அன்புடைமை முதலிய பண்பாடுகளைக் கூறியதுடன் அமையாது அவன் வாழ்க்கையில் எந்தத் தரத்தில் உள்ளான் என்பதையும் இலக்குவன் குறிப்பது, அவனது நுண்மாண் நுழைபுலத்தையே குறிக்கிறது. எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை குகன், என்று கூறும்