பக்கம்:தம்பியர் இருவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தம்பியர் இருவர்

அழிப்பேன்; காடுகளில் வசிப்பதற்கேற்ற இடங்களைத் தேடித்தர வல்லேன்; கவலைக் கிழங்கு முதலியவற்றை மலையினிடத்தும் தோண்டித்தர வல்லேன். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று குடிநீர் கொண்டு வர வல்லேன்; எதற்கும் அஞ்சேன்; அனேக வில் வீரர்களை உடையேன்; உன் திருவடி ஒருபோதும் பிரியாதிருக்க நீ அருள் செய்வையாயின், என்ற பொருள்பட மேலும் கூறுகிறான்:

'கல்லுவென் மலையேனும் கவலையின் முதல்யாவும்: செல்லுவென் நெறி; தூரம் செறிபுனல் தரவல்லேன்: வில்இனம் உளென்; ஒன்றும் வெருவலென் ஒருபோதும் மல்லினும் உயர்தோளாய்! மலரடி பிரியேனால்.’

(கம்பன்-1992)

இவ்வாறு குகன் அடுக்கிக்கொண்டே சென்றதைக் கேட்ட இராமன் மலைத்துப்போய்விட்டான். இத்தகைய அன்புடையாரை இராமன் இது வரை கண்டதில்லை, குகனுக்கு இவ்வளவு வன்மையும் உண்டு என்பதை, இராமன் அறியாமல் இல்லை. பின்னர் ஏன் குகன் இவ்வாறு வரிசைப்படுத்துகிறான்? அதுவே அவனிடம் உள்ள சிறப்பு. நகர மக்கள் இழந்துவிட்ட நாகரிகம் இது. வஞ்சகம் என்பதையும் போலித் தன்னடக்கம் என்பதையும் கனவிலும் கருதாத குகன், இச்செயல்களில் இவ்வரச குமாரர்களைவிடத் தனக்குப் பழக்கம் மிகுதி என்று நினைக்கிறான். யாரும் அதனை மறுக்க இயலாதன்றோ? அரண்மனையிற்பிறந்து வளர்ந்தவர்களால் கவலைக் கிழங்கை வெட்டி எடுக்க முடியுமா? ஆள் நடமாட்டம் அற்ற காட்டில் நீர் நிலை எங்குளதென்று அறியத்தான் முடியுமா? முதன்முறையாக வனம் புகுந்துள்ளனர். அதிலும் பெண் ஒருத்தியை உடன் கொண்டு புகுந்தனரே! என்ன அறியாமை தனி மனிதனே வாழ்க்கை வசதி செய்துகொள்ள முடியாத காட்டில், அவ்வாழ்க்கை அனுபவம் ஒரு சிறிதும் இல்லாதவளும், அதற்கு மறுதலை