பக்கம்:தம்பியர் இருவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தம்பியர் இருவர்

'ஆன்றான் பகர்வான் பினும், ஐய! இவ்வையம் மையல்

தோன்றா நெறிவாழ் துணைத்தம் பியைப்போர்

தொலைத்தோ?” (கம்பன்-1739)

குற்றமற்ற வழியில் (சன்மார்க்கத்தில்) வாழும் பரதன் என்று மட்டும் கூறாமல் இராகவன் துணைத் தம்பி என்றும் கூறியது அறிந்து மகிழற்குரியது. இவ்வொரு சொல்லால் இலக்குவன் கொண்டுள்ள அகந்தைக்கு இராமன் நல்ல சாட்டையடி தருகிறான். இராமனிடத்து அன்பு செய்பவர்கள் தன்னைப் போலவே செய்யவேண்டும்; அவ்வாறு செய்யாதவர் அனைவரும் இராமனுக்குப் பகைவர்கள் என்பதே இலக்குவன் கருத்துப்போலும்!

ஒருவனிடம் காட்டும் அன்பு பல வகையில் காட்டப் படலாம். பெரிதும் படாடோபத்துடனும் ஆரவாரத் துடனும் தம்முடைய அன்பை வெளியிடுபவர் சிலர்; சிலர் வாய் பேசாமலே தம்முடைய முழு அன்பையும் செலுத் துவர். இவ்விரு வகையினரும் ஒருவரை ஒருவர் அன்பிலார் என்று குறை கூறுவது எவ்வளவு தவறானது! இலக்குவன் இராமனிடம் கொண்ட அன்பு முதல்வகையைச் சார்ந்தது. ஆடம்பரத்துடன் ஒரளவு தன் மதிப்பும் கொண்ட அன்பாகும் அது. எனவே, பரதனது ஆழ்ந்த அன்பை இலக்குவன் அறிந்துகொள்ளக் கூடவில்லை. பரதன் இராமனிடம் கொண்ட அன்பு பெரிய ஆற்றில் ஒடும் நீர் போன்றது; அதில் ஆரவாரமோ, சந்தடியோ இல்லை. ஆற்றின் ஆழத்தை இறங்கிப் பார்த்தால் ஒழியக் காண முடியாதது போலப் பரதனுடைய அன்பின் ஆழத்தை அறிந்து கொள்வதும் கடினம். இராமனுடனேயே நிழல் போலப் பரதன் இல்லாவிடினும், அவனும் அன்பு செலுத்தி னான்; இலக்குவனைவிட அதிகமாகக்கூட அன்பு செலுத்தி னான்; மில்டன் என்ற கவிஞர் பெருமான் தன் கண் ஒளியை இழந்து பாடிய கவிதை ஒன்றில் கூறும் அடிகள் நினைவிற்கு வருகின்றன. -