பக்கம்:தம்பியர் இருவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 85

பரத்துவாசன் கண்ட பரதன்

இராமனை அழைத்து வரக் காடு சென்ற பரதனைப் பரத்துவாச முனிவன் எதிர்கொள்கிறான். முனிவன் என்ற முறையில் அவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தைச் செலுத்துகிறான் பரதன். அவனை வாழ்த்திவிட்டு முனிவன், இத்தவக்கோலத்துடன் நீ காட்டை அடையக் காரணம் யாது?’ என்கிறான். இவ்வினாவைக் கேட்ட வுடன் பரதன் சீற்றம் கொள்கிறான். மிக்க கோபத்தையும் மனக் கொதிப்பையும் கொண்ட பரதன், ஐயனே, நான் இவ்வாறு வந்தது ஏன் என்று நீ வினவியது உன் தவ வடிவத்திற்குப் பொருத்தமில்லாத வி னா வா கு ம்,' என்கிறான்.

இதே வினாவைத்தான் சற்று முன்னர்க் குகனும் கேட்டான். ஆனால், அதற்குச் சீற்றமில்லாமல் விடை இறுத்த பரதன், பரத்துவாச முனிவனிடம், மட்டும் சீற்றங் கொள்ளக் காரணம் யாது? பரதனுடைய அறிவு நுட்பத்தையே காட்டுகின்றன. இச்செயல்கள். குகனுடைய அன்பின் பெருக்கை அறியத்தான் பரதனுக்கு வாய்ப்பு இருந்தது; ஆனால், அவனுடைய அறிவின் திறம் எத்தகை யதோ என மருண்டான். மேலும், வேடனாகிய குகன் அறிவாற்றல் படைத்திருக்க முடியாது என்றுங் கருதி யிருத்தல் கூடும். எனவே, குகன் கேள்வியில் பரதன் தவறு காணவில்லை. அன்றியும், இராமன் மாட்டுக்கொண்ட பேரன்பில் இருவரும் (பரதனும், குகனும்) ஒன்றாகவே திளைப்பவராகலின், குகனது வினாவைப் பரதன் வேறு விதமாகக் கருதவில்லை. இம்மட்டோடும் அன்றி, குகன் கேட்ட வினாவையும் பரத்துவாசன் வினாவையும் ஒப்பு நோக்குகையில் ஒரு வேறுபாடும் காணப்படுகிறது. 'எய்தியது என்னை?’ என்று மட்டுந்தான் குகன் வினவு கிறான். ஆனால், முனிவனோ, எடுத்த மாமுடி சூடிநின் பால் இயைந்து, அடுத்த பேரரசு ஆண்டிலை ஐய நீ?" என்று வினவியதுதான் பரதனுடைய சினத்திற்குக் காரணமாகி