உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் இரண்டு

கருத்துடைமை


21. கருத்துடைமையே நித்தியமான நிருவாண மோட்சத்திற்கு[1] வழி;மடிமையே மரணத்திற்கு வழி. கருத்துடையவர் இறப்பதில்லை; மடிமையுடையவர் இருக்கும்போதே இறந்தவராவர். (1)

22. கருத்துடைமையின் நன்மையைத் தெளிவாக உணர்ந்த அறிவாளர்கள் அதிலே களிப்படைகின்றனர்; ஆன்றோர் காட்டிய நெறியில் ஆனந்தமடைகின்றனர். (2)

23. அறிவாளர்கள் எப்போதும் தீவிர முயற்சியுடனும், தளராத உறுதியுடனும், தியானத்துடனும், மகோன்னதமான விடுதலைப் பேறும் ஆனந்தமுமாகிய நிருவாணத்தை அடைகின்றனர். (3)

24. கருத்துடைய ஒருவன், விழிப்படைந்து, நினைவு குன்றாமல், நற் கருமங்களைச் செய்து கொண்டும், ஆலோசனையுடன் வினை புரிந்து கொண்டும், தன்னடக்கத்தோடு தருமத்தை அநுசரித்து வாழ்ந்தால், அவன் புகழ் ஓங்கி வளரும். (4)

25. அறிஞன் விழிப்படைந்து, கருத்துடனும், நிதானத் துடனும், அடக்கத்துடனும், ஒழுக்கத்துடனும், வெள்ளத்தால் சேதமடையாத ஒரு தீவைப்போல் தன்னைப் பலப்படுத்திக் கொள்கிறான். (5)


  1. நிருவாணம்-பௌத்த தருமத்தின் முடிவான இலட்சியமான முக்தி. உலக வாழ்வில் இருக்கும்போதே ஒருவர் நிருவாணமடைய முடியும். ஆசை, துவேஷம், அறியாமை என்னும் மலங்களை அறுத்து, 'நான்' 'எனது என்ற பற்றற்று, எல்லா ஜீவராசிகளிடத்தும் தாயன்பு கொண்டு, வாழும் நிலை அது. இந்த நிலையிலுள்ளார் பூத உடலை நீத்துப் புகழுடம்பு பெறுதல் பரி நிருவாணம்' எனப்படும்.

த–2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/19&oldid=1381765" இலிருந்து மீள்விக்கப்பட்டது