பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40



கைநிறைய நாவல் பழத்தை எடுத்துக்கொண்டு அந்த ஜிப்ஸி குழந்தைகளுக்குத் தாராளமாக ஜின்கா வழங்கிற்று. பல வேடிக்கைகளும் செய்து காண்பித்தது.

உடனே ஜின்காவிடம் பெரிய குழந்தைகளின் கூட்டமே கூடிவிட்டது. ஜின்கா 'ஜங்ஜங்’ என்று குதிப்பதும், அதே சமயத்தில் அவர்களை ஏமாற்றி விட்டுக் கூடாரத்தின் உள்ளே எட்டிப் பார்ப்பதுமாக இருந்தது. ஜின்கா கொடுத்த நாவல் பழத்திலும் அது செய்யும் வேடிக்கைகளிலும் குழந்தைகள் மயங்கிக் கிடந்தன. ஆகையால், அது கூடாரத்தை எட்டிப் பார்ப்பதை எவரும் கண்டுகொள்ளவே இல்லை.

ஜிப்ஸிகள் போட்டிருந்த ஆறு கூடாரங்களிலும் அது நன்றாகப் பார்த்துவிட்டது. ஆனால், அங்கு எங்குமே கண்ணகியைக் காணவில்லை. மீண்டும் ஒரு முறை நன்றாகப் பார்த்துவிட்டு ஜின்கா ஏமாந்து போயிற்று. அதனால் மிக்க சோர்வுடன் அது தங்கமணியிடம் திரும்பிற்று.

ஜின்காவின் தோற்றத்தைக் கண்டவுடனே, அதனால் கண்ணகியை ஜிப்ஸி கூடாரத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை உடனே தங்கமணி தெரிந்துகொண்டான். வழக்கமாக அது வரும் போதே வெற்றியா தோல்வியா என்பதைத் தங்கமணி கண்டுகொள்வான். மேலும், ஜின்கா