பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. சு. சமுத்திரம்


ராசம்மாவின் அண்ணன், துண்டை எடுத்துத் துாரமாய் எறிந்துவிட்டு, சித்திரசேனனைப் பேச்சாலேயே எரித்தான்.
'ஏன்.... அரிவாள எடுக்கமாட்டான்? இல்லாதவன் பொண்டாட்டி எல்லாத்துக்கும் மயினிதானே..?புருஷன் சரியாய் இருந்தால், பொண்டாட்டி இப்படியா சீரழிவாள்?”
சித்திரசேனனுக்குச் சற்றே கோபம் வந்தது. அதேசமயம், மச்சானுக்கு கோபத்தை ஏற்படுத்தாத அளவுக்கான கோபத்தோடு கேட்டான்.
"நான் எதுல மச்சான் சரியாய் இல்ல?”
மச்சான்காரன் வைத்தியலிங்கம், சித்திரசேனனை நெருங்கினான். அண்ணன் அக்காவின் கணவனை அடிக்கப் போகிறானோ என்று பயந்து, தவிட்டைத் அலம்பிய தம்பி எழுந்தான். உரலைக் குத்திய ராணி, உலக்கையை அந்தரத்தில் பிடித்தபடி யந்திரமாய் நின்றாள். ஆனாலும் மச்சான்காரன், சிறிது இடைவெளியில் நின்றபடியே கத்தினான்.
"என்ன கேட்கீரு? எதுல சரியில்லன்னா. நீரு எதுலயுமே சரியில்ல. ஊர்ல விவசாயம் செய்து பிழைக்க 'கரி' வலிச்சுப் போய் மெட்ராஸ் போனிரு. அங்கேபோன பயலுக ஊருல சொத்து எடுக்கும்போது, நீரு ஊருல இருக்க சொத்த வித்து, கடையில போட்டிரு. அதாவது பரவாயில்லே. ஒம்ம அம்மாக்காரி, தான் பேரில் இருந்த வீட்ட ஒமக்குத் தராமல். சின்ன மகனுக்கே கொடுத்துட்டாள். பெத்ததாயோட ஒரவஞ்சனையைத் தட்டிக்கேட்க ஒமக்குத்  துப்பில்ல. சரி, கட்டுனபொண்டாட்டியையாவது கையோட மெட்ராஸுக்குக் கூட்டிப் போயிருக்கலாம். அவளையும் பிள்ளைகளையும் ஊர்ல விட்டுட்டு, மெட்ராஸைப் பார்த்து ஒடிட்டியரு. ஒம்ம தம்பி, என் தங்கச்சிய பேசின பேச்சையும், திட்டுன திட்டையும் ஒமக்கு லெட்டர் லெட்டராய் எழுதுனோம். ஒப்புக்கு வந்து அந்தப் பயகிட்டே பிச்சைக்காரன் மாதிரி கெஞ்சுனீயரே தவிர... மிஞ்சல."