பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தானாடி சதையாடி 5

இப்போது, தம்பிக்காரன், அண்ணனிடம் இருந்து வாய்ப்பொறுப்பை வாங்கிக் கொண்டான்.

"இப்படி நீரு. இடம் கொடுத்ததாலதான், என் அக்கா அந்தப் பயலுக்குப் பயந்து வீட்டைப் பூட்டிட்டு இருக்க வேண்டியதாப் போச்சு. நாங்க போய் கேட்கப்போனோம்.ஒங்க ஊர்ப் பயலுவ...ஒண்ணாம் நம்பர் போக்கிரிப் பயலுவ... ஊர்விட்டு ஊர் வந்தா அதட்டப் போறீங்கன்னு எங்களை அதட்றானுவ. ஒரு பொம்பளைய, ஒரு முழுத்த ஆம்புள அரிவாள தூக்கிட்டு வெட்டப்போனது பெரிசாத் தெரியல... என் அக்காவை, கிளியை வளர்த்துப் பூனைகிட்டே கொடுத்தது மாதிரி ஒம்மகிட்ட கொடுத்திட்டோம்."
அண்ணன் - தம்பியரின் குரல்கள், எப்படி படிப்படியாக ஏறியதோ, அதுபோல் ராசம்மாவின் அழுகையும் கூடியது. விம்மல்கள், வெடிச் சத்தங்களாயின. தலைமுடி, தடம்புரண்டது. இதைப் பார்த்துவிட்டு தங்கைக்காரி ராணியும் அழுதாள். அது தான் சாக்கு என்றோ அல்லது இயற்கையாகவோ, உலக்கையை சுவரில் சாய்த்துவிட்டு அக்காவைக் கட்டிப்பிடித்து அழுதாள். அண்ணிக்காரியும், கயத்தை இழக்கப் போவதுபோல் கைகளைப் பிசைந்தாள். இந்தப் பின்னணியில், மீண்டும் தவிடு கலக்கிய தம்பி, "இந்த உடம்பை வச்சுட்டு எதுக்காக இருக்கணும்?” என்று தன்பாட்டுக்குச் சொன்னான். தனது உடம்பையும் ஏறஇறங்கப் பார்த்துக் கொண்டான்.
சித்திரசேனனிடம் சினத்தீ மூண்டது. பச்சிளம் மகளின் வீங்கிய பிடரியைப் பார்க்கப் பார்க்க, அவன் முகுது நிமிர்ந்தது. சேதாரக் காதைக் காட்டிய மகனை நோக்க நோக்க, அவன் முகம் சிவந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக, அவனைப் பார்த்ததும், 'ஏய் யார் வந்திருக்கா பாருங்க... அப்பாடா அப்பாடா...' என்று சொன்னபடியே, குழந்தைகளோடு முன்னால் வந்து நின்று வரவேற்கும் ராசம்மா, இப்போது அதுகளை விரட்டிவிட்டு,