பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 சு. சமுத்திரம்

கணவனை ஒரம் சாய்த்துப் பார்த்தபடியே, உள்ளறைக்குள் போகிறாள். போகிற போக்கில் பார்த்தால், அவளது பளபளப்பான மிளகாய்ப் பழ மேனி, இப்போது வத்தலாகிப் போனது போன்ற தோற்றம். கோலிகள் போன்ற கண்கள், தேய்ந்து போனதுபோல் கிடந்தன. மலை மேடான கன்னங்கள், பள்ளதாக்காய் காட்டின. மனைவியை பார்க்கப் பார்க்க -

சித்திரசேனனுக்குள் ஒரு இந்திரசித் எழுந்தான். என்றாலும், அவனுக்கு எதிராக ஒரு லட்சுமணனும் மூளைக்குள் உருவானதால், அவன் உளறியும், இடறியும் பேசினான்.

"ஆனாலும். முச்சந்தியில. அவள் கிட்ட அசிங்மாய்.”

“எதுய்யா அசிங்கம்..? சொந்த பொண்டாட்டிய ஒருத்தன் அரிவாளை எடுத்துட்டு விரட்டுறான். அது அசிங்கமா தெரியல? அப்படி அரிவாளை எடுத்த கையை, வெட்டாமல் இருக்கிற நீரு பேடியிலயும் பேடி, பெரிய பேடின்னு அர்த்தம். உம்மால் ஒம்ம தம்பியை அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சுதான், நாங்களும் வரப்போறோம். நீரு என்னடான்னா செத்த பிணமாய் நிக்கியரு. உடனே புறப்படும். ஏன், செத்தவன் கையில வெத்தல கொடுத்தது மாதிரி முகத்த வைக்கியரு? சரி. ஒமக்கு இப்போ வேண்டியது தம்பியா..? பொண்டாட்டியா..?”

சித்திரசேனனின் இந்திரசித், லட்சுமணனை மயக்கிப் போட்டுவிட்டு, சூளுரைத்தான்.

“எத்தான். இந்தத் தடவ அவனை விடப்போறதுல்ல. இனிமேல், நான் அவனுக்கு அண்ணனும் இல்ல. அவன் எனக்குத் தம்பியுமில்ல. சரி. எடும், வேல் கம்பை.” இன்னும், தொட்டியைக் குடைந்து கொண்டிருந்த தம்பி மயில்வாகனனைப் பார்த்து, அண்ணன் வைத்தியலிங்கம் கத்தினான். "ஏல நீ பேடியா..?” தம்பிக்காரன், தான் பேடியல்ல என்று அண்ணனுக்காவது நிரூபித்தால், அவனை எதிர்காலத்தில் பயமுறுத்த எளிதாக இருக்கும்