பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தானாடி சதையாடி 7

என்பதுபோல், வேக வேகமாய் வீட்டுக்குள் ஒடி, ஒரு உருட்டைத் தடியை எடுத்துக் கொண்டான்.

அந்த வீட்டின் மூன்று பெண்களும் "அய்யோ. அய்யோ...' என்றார்களே தவிர, அந்தப் புறநானூற்று வீரர்களைத் தடுக்கவில்லை.

கால, எமதூதர்கள் போல், அந்த மூவரணி, ஒரு வாய்க்கால் பாலத்தின் மேல் உட்கார்ந்திருந்தது. அதிக நேரம் காத்திருக்க அவசியமில்லை. எதிர்த்திசையில்,சித்திரசேனனின் தம்பி துரை வந்தான். ஒரு சைக்கிளில் படுவேகமாக வந்தான். இரும்பைச் செதுக்கியது போன்ற உடம்பு. எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் கண்கள்.

சித்திரசேனன், தம்பியின் சைக்கிள் முன்னால் போய் நின்றான். உடனே துரையும் ஒரு காலை ஊன்றியபடியே சைக்கிளோடு நின்றான். "எப்பண்ணா வந்தே?" என்று சொல்லப் போனவன், அண்ணனின் தோரணையையும், அவனது மச்சான்கள் பற்களைக் கடித்துக் காட்டும் பகைப் பார்வையையும் பார்த்துவிட்டு பகைப்புலத்தை, நோட்டம் போட்டபடியே, உடம்பில் கழுத்துக்குக் கீழே அசைவற்று நின்றான். அண்ணனான சித்திரசேனன், சுக்கிரீவனாகி, தம்பியை வாலி போல் பாவித்துக் கொண்டான்.

"என் பொண்டாட்டிய... எதுக்குல... வெட்டப் போனே... ஏல படபடத்தான்! ஒன்னத்தான்... கேட்கேன். பதில் சொல்லாமல் நீ நகர முடியாது."

வெட்டுறதுக்கு அருவாள தூக்கிட்டா. வெட்டுவனா?

'என் பிள்ளியள எதுக்குல காத பிடிச்சி ரத்தம் வரும்படியா திருகுன?

"என் பிள்ளியிளக்கூட திருவுறேன். உன் பிள்ளியவேற...என் பிள்ளிய வேறயா... மயினி சொல்லிக் குடுக்குற கெட்ட கெட்ட வார்த்தைவள ஒண்னுகூட பாக்கியில்லாம, முட்டாப் பய புள்ளிய என் மேல ஏவி விட்டுதுக... ஏதோ கோவத்துல திருகிட்டேன்.