பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 க. சமுத்திரம்

         "டி.டி.ஓ.வும்' (டிவிஷனல் டெவலப்மெண்ட் அதிகாரி) வரலாமுன்னு 'பீ.டி.ஓ.' என்கிட்ட சொன்னார்" என்றார் பஞ்சாயத்தின் எதிர்காலம்.
         அதிகாரிகளின் பதவிப் பெயர்களைவிட, 'என்கிட்ட' என்ற  வார்த்தைக்கே, இருவரும் அதிகம் அழுத்தம் கொடுத்து, அங்கேயே 

முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்குவது போல் தோன்றியது. இந்தச் சமயத்தில், ஒரு இடக்கு-மடக்குவாதி "எதுக்கும்..... நிறைய பாலு வாங்கி வைக்கலாம்... சர்க்கார் பேர்ல அவங்க குடிக்க வராவிட்டால்... அவங்க பேர்ல நாம குடிக்கலாம்” என்றார் - நாக்கைச் சப்பிக் கொண்டே, பிறகு "அப்போ மட்டும் நமக்கா இந்தப் பயலுவ பால் தருவாங்க... நாற்காலியில் ஒக்காந்திருக்கிறவங்க. ஒரே மொடக்கா குடிச்சுப்பட மாட்டாங்களா என்ன..” என்று நினைத்தவர்போல், உதட்டைத் துடைத்த நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டார்.

      நேரம் ஆகிக்கொண்டிருந்ததே தவிர, ஜீப் சத்தம்கேட்கவில்லை. அந்த ஊருக்குள் எந்த ஜீப்பும் நுழைவதற்கு முன்னால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே, இழவு மேளம் மாதிரி சத்தம் கேட்கும். எதிரொலி கொடுக்கும் வகையில் பாறைகளை ஊர் உள்ளடக்கி வைத்திருப்பதே காரணம். இன்னும் சத்தத்தையே காணோம். எப்போ வந்து... எப்போ பேசி...
       'தன்னிறைவுத் திட்டம் என்ற திட்டத்தின் கீழோ அல்லது மனுநீதித்திட்டம் என்ற ஒன்றின் கீழோ,ஏதோ ஒன்றின் கீழ்,பெரிய அதிகாரிகள் அன்று ஊருக்கு வந்து முகாம் போட்டு மக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து, முடிந்தால் அங்கேயே ஆவன செய்யவேண்டும் என்பது ஏற்பாடு. இதற்காக எப்பாடு பட்டாவது அதிகாரிகள் வரப்போகிறார்கள். நோட்டீஸ் அச்சாகி விட்டது. அது போதாதென்று 'தண்டோரா' போட்டு கற்றுப்புறமெங்கும் சொல்லி யாகிவிட்டது. அதிகாரிகள் வந்த பிறகு, கிராமத்தில் தேனும் பாலும் ஒடும் என்று சொல்லியாகிவிட்டது. சொன்னதுக்கு ஏற்ப பால்