பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 சு.முத்திரம்

'எனக்கா' என்பதுமாதிரி, அகல வாய் பிரித்து அவள் பார்த்த போது, திசைமாறிய தலையில் விறகுக்கட்டு தடுமாறியது. காண்டிராக்டர் கண்களைச் சிமிட்டிக் கொண்டே பேசினார்.

"ஆமாம் பாட்டி.. அதிகாரிங்க ஊர்ப்பிரச்சினையைத் தீர்க்க வராங்க. ஒனக்கு முதியோர் பென்ஷன் கொடுக்க ஏற்பாடு பண்ணலாம். தாசில்தார்கிட்ட நீயும்சொல்லு.நானும் சொல்றேன்...”

இரண்டு மூன்றுபேர், மாதா மாதம் ஏதோ பணம் வாங்கப் போவதாகக் கேள்விப்பட்டிருந்த முனியம்மா, விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு, அதன் மேலேயே உட்காரப் போனாள். பிறகு அப்படி உட்காருவது அவள் செய்யும் தொழிலுக்கு மரியாதைக் குறைவானது என்று நினைத்தவள்போல், கிழிந்த புடவையை கைகளால் சேர்த்துப் பிடித்துக் கொண்டே நின்றாள். பெரிய மனிதர்களில் ஒருவர், காண்டிராக்டரின் விலாவில் இடித்து, "ஒமக்கு தராதரம் தெரியமாட்டக்கே" என்றபோது, காண்டிராக்டர் "சொம்மா கிடயும்... மந்திரிங்க எல்லாம், 'டவுன் டிராடன் - அதாவது ஏழைபாளை ஏழைபாளைன்னு பேசுற காலம். நாமும், ஊர்க்கூட்டத்தில ஏழைகபாளைங்கள சேர்த்திருக்கோமுன்னு தெரியாண்டாமா?” என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு பேசப்போனவர் திடீரென்று எழுந்தார்.

ஜீப் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஜீப் தெரிந்தது. அடேயப்பா... ஒரு ஜீப் அல்ல. நான்கைந்து ஜீப்கள் வந்தன. ஒவ்வொன்றிலும் ஏழெட்டு அதிகாரிகள்.

முன்கூட்டியே, முகப்பில் நி றுத்தப்பட்டிருந்த பெரிய வீட்டுச் சின்னப் பிள்ளைகள், அதிகாரிகளுக்கு, சந்தன தட்டையும், வெள்ளைக் கற்கண்டு தாம்பாளத்தையும் காட்டின. அதிகாரிகள் பூசிக் கொண்டும், மென்று கொண்டும் ராசாதி ராச கம்பீரமாய் தயாராக இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.

மாவட்ட கல்வி அதிகாரியின் மேல், மானேஜர் கண்களை விட்டார். இதேபோல் டெவலப்மென்ட் ஆபீசர்மேல், இரண்டு