பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 க. சமுத்திரம்

       ராமச்சந்திரன் நடுரோட்டில் காரை நிறுத்தி இருப்பதை புரிந்துகொண்டு, மீண்டும் அதை, இயக்கி, பத்து பதினைந்து கிலோமீட்டர் வேகத்தில் நடக்க விட்டான். இதை வேறுவிதமாக எடுத்துக் கொண்டாளோ.. என்னவோ, பழனியம்மா சோகமாக சமாளித்தாள். துள்ளி விழுந்த வார்த்தைகளில் சிலவற்றை எடுக்கப் பார்த்தாள்.
       "ஒங்களை மாதிரின்னு சொன்னேனே தவிர, ஒங்களைன்னு சொல்லல.. அடுத்தவன் தொட்ட பெண்ணாச்சேன்னு, நீங்க நினைக்கிறது எனக்குத் தெரியும்.”
       அந்தக் கார், அவசர அவசரமாக ஒரு ஆலமரத்தின் குடைக் கிளைகளுக்கு இடையே, ஓரங்கட்டி நின்றது. அவன், அழுத்தம் திருத்தமாக சொன்னான்.
      "என்ன வார்த்தை பேசிட்டீங்க? நீங்க கிடைத்தால், நான் கொடுத்து வைத்தவன்.”
      'ரொம்ப ரொம்ப சந்தோஷம். அப்போ, ஒங்க அக்கா மகள்கிட்ட, நீங்க ரெண்டாவது கல்யாணம் செய்ய சம்மதமுன்னு ஒரு கடுதாசி வாங்கிட்டு வந்துடுங்க..”
       "அப்படி வாங்கினாலும், அது சட்டப்படி செல்லாது.”
       "என்ன சொல்ரீங்க.."
       "நான் பெரியவக்கிலோடடிரைவர் என்கிறத மறந்துட்டிங்க, பலர், அவர்கிட்ட கார்லயோ, ஆபீஸ்லயோ பேசுறதையும், அவர் பதிலளிக்கிறதையும் கேட்டு, நானே, பாதி வக்கீலாயிட்டேன். ஒரு மனைவியோ அல்லது கணவனோ நினைத்தால், விவாகரத்து வழக்கையும், வாய்தாவாய்தாவாய் வருடக்கணக்குல இழுக்கலாம்."
       "அடக்கடவுளே.. என் ராசியே அப்படித்தான். பரவாயில்ல.. பட்ட காலுதானே..”