பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 க. சமுத்திரம் குடிமகனின் கடமை என்ற நாட்டுப்பற்றான தேசபக்தியின் உந்தலில், பரமசிவம், தானும் வாங்கி, சொந்தக்காரர்களையும் வாங்க வைத்து, அந்தப் பணத்தை வைத்தே ஏழை எளியவர்களின் நிலத்தை வாங்கிப் போட்டார். மங்கம்மா, சாதாரண பூமாலை விற்பதில் இருந்து, ரோசாப்பூ மாலை விற்கும் அளவுக்கு முன்னேறியபோது, பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவரானார். பஞ்சாயத்துத் தலைவரானார். அவர் மைத்துனர்பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும்,பிராஞ்ச்போஸ்ட் மாஸ்டராகவும் மாறினார். அப்போது, பஞ்சம் வந்தது. கூடவே மங்கம்மாவுக்கும், பரமசிவத்திற்கும், தத்தம் முன்னேற்றத்தில் ஒரு பரீட்சை வந்தது. அவள், மாலையை விலைபேச ஆளில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும், தலைவர்களும், அந்தப் பஞ்சப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு அஞ்சியதால். கூட்டங்கள் நடக்கவில்லை. மாலைகளுக்கு அவசியமில்லை. அதே சமயத்தில், நாட்டின் உணவுப் பொருட்களை சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டும் என்ற உன்னத நோக்கில், வந்த ரேஷனைப் பயன்படுத்தி, எங்க ஊரு ஏழைங்க... ரேஷன் இல்லாட்டா செத்துப் போயிடுவாங்க என்று சொல்லி, பரமசிவம் ரேஷன்கடை வைத்தார். குழந்தைகள் உணவில்லாமல் வயிறு முட்டியபோது, அவர் வயிறும் முட்டியது. ரேஷன் கடையால், பல நன்மைகள் ஏற்பட்டன. பரமசிவம், பக்கத்து டவுனில் மரக்கடை வைத்தார். உள்ளுரில் ஜவுளிக்கடை வைத்தார். ஏழை விவசாயத் தொழிலாளிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக, வயலுக்கு டிராக்டர் வாங்கிப் போட்டார். ஆக ரேஷன் கடை வைத்ததால், ஏழைகளுக்கு வயிற்றுக்கு கிடைத்ததோ இல்லையோ, கைவேலை செய்ய மரக்கடையும்; எண்சாண் உடம்பில் இருசாணையாவது மறைக்க ஜவுளிக்கடையும் கிடைத்தன.