பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கிடம் இல்லாத பொழுது *29 வகுப்பு, மீண்டும் துவங்கியது. எங்கேயோ காணாமல் போன சுரேஷ்சிங், திடீரென்று ஓர் ஆறடி மனிதருடன் உள்ளே வந்தார். அந்த மனிதரின் படர்ந்த முகத்தையும், பெரியபெரிய பற்களையும் பார்க்கும்போது, ஆசாமிக்கு மீசை இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், பாதகமில்லை. ஜாட் இனத்துக்கு உரிய கம்பீரம், துடுக்குத்தனமான பேச்சு. "லுக்... நீங்க சீனியர் அதிகாரிகள். பல்வேறு மாநிலங்களிலிருந்து, ரயிலில் முதலாவது வகுப்பு அல்லது ஏ.சி. சிலிப்பர்ல வந்திருக்கீங்க. தினமும் 125 ரூபாய் அலவன்ஸ் வாங்கப் போறிங்க. வசதியான ஐந்து ரூபாய் அறையில் தங்கப் போரீங்க. இப்படி சகல வசதியோடும், சம்பளத்தோடும் அரசாங்கம் உங்களை எதுக்காக இங்கே அனுப்பி வைக்குது. சொல்லுங்க..? எதற்காக. ஏன்... எதற்காக." திடீரென்று, டில்லிபுத்திரன் வர்மா எழுந்தார். ஏன் என்பதற்கு இருப்பிடத்தில் இருந்து பத்து நிமிடமும், பிறகு வகுப்பறையின் முகப்புக்கு வந்து எதற்கு என்பதற்கு பத்து நிமிடமும் பேசினார். அதற்குள் அந்த ஜாட் மனிதர்கதாரித்து, தனது தலைமையில் மூன்று தடவை ஏற்கனவே பயிற்சி எடுத்த வர்மாவின் தோளில் கையைப் போட்டு, அவர் மார்பைப் தட்டிக் கொடுப்பதுபோல், ரத்தக்கசிவு வரும்படி கிள்ளியபடியே பேசினார். "நான் இந்த பயிற்சி நிலையத்தின் டைரக்டர். பேராசிரியர் திவான்லால். வர்மாஜி! எனக்கும் பேச சான்ஸ் கொடுங்க! லுக் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன். உங்களுக்காக கெஸ்ட் லெக்சர் ஏற்பாடு செய்திருக்கோம். ஒவ்வொரு லெக்சருக்கும் 300 ரூபாய். அவங்க போக்குவரத்துக்கு 100 ரூபாய். இப்படித் தினமும் நாலு லெக்சர். இது எதுக்காக... யாருக்காக... டோண்ட் டாக் வர்மா. ஐ வில் டாக். மூத்த அதிகாரியான ஒவ்வொருவருக்கும் இந்தப் பயிற்சிக் காலம் வரைக்கும் சராசரி 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறோம். எதுக்காக...? யாருக்காக...? நானே சொல்கிறேன்.