பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவேறு கண்கள் 7 பாண்டியம்மாள், தன் தலையையே ஒரு திருப்பு திருப்பிக் கொள்கிறாள். சின்ன மகனிடம் இதுவரை காணாத கஷ்டத்தையும் நஷ்டத்தையும், பெரிய மகனின் வசதிகளே பூதக்கண்ணாடியாய், அவற்றைப் பெரிதாக்குகின்றன. அவள் திக்குமுக்காடுகிறாள். நான் பெத்த செல்வம் மேல நானே கண்ணு போடுறேனே என்று நாணிக் கோணுகிறாள். மனமார கொடுக்காத கார்ச் சாவியால் அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே என்பதுபோல், மகனின் கையை தனது இரு கரங்களுக்குள்ளும் இருத்திக் கொள்கிறாள். அவரோ, அதே சிறுவன்போல், மூங்கில் கூடையில் உள்ள ஒன்றை எடுத்து கடித்துக்கொண்டு அலைமோதிப் பேசுகிறார். "எம்மா... இந்த ஏழிலைக்கிழங்க... ஒரு கடி கடிச்சிட்டு கூடவே அதிரசத்தையும் ஒரு கடி கடிச்சேன். உடனே நீ, நீயும் உன்னோட ருசியுமுன்னு சிரிப்ப பாரு. ஞாபகம் இருக்காம்மா?” பாண்டியம்மாள், அந்த பேச்சில் சின்ன மகனை மறந்துவிட்டு, மகன் கையிலிருக்கும் ஏழிலைக்கிழங்கை வாங்கி அதன் தோலை உரித்துவிட்டு, மீண்டும் அவன் கையில் திணிக்கிறாள். அவள் உடம்பைப்போல் தோற்றம் காட்டும் சிறிது காய்ந்து போன அதிரசத்தை மகனிடம் கடிக்கக் கொடுக்கிறாள். அவள் கண்கள், அருகேயுள்ள சாப்பாட்டு மேசைமேல் விழுகின்றன. அதன்மேல், பளபளப்பில் பழுத்த ஆரஞ்சுகளும், ஆப்பிள்களும் ஒரு கலர் கூடையில் கிடக்கின்றன. நான்கைந்து தட்டுக்கள். அவற்றில் சின்னச்சின்ன செதுப்பிடங்களில் விதவிதமான சட்டினி சாம்பார். பன்னிர்ப்பூ மாதிரியான இட்லிகள். தட்டுக்குப் பக்கத்திலுள்ள குட்டித்தட்டில் ஒன்றில் ஆம்லெட் இன்னொன்றில் முட்டைப் பொரியல், பாண்டியம்மாள், கண்முன்னால் அவை படப்பட, நெஞ்சத்தின் முன்னால், பழைய சோற்றை ஊறுகாயுடன் சாப்பிடும் சின்னவன் பிள்ளைகளின் முகங்கள் தோன்றுகின்றன. எப்போதாவது, சின்னவன், சந்தைக்குப் போய்விட்டு, காராப்பூந்தி