பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


நின்றனர். கப்பலிலும் அவருக்குப் பந்தோபஸ்து அதிகம். சீமைக்குச் சென்ற பின்னும் அவரை ஆயுதந்தாங்கிய இரகசிய போலிசார் காத்து வந்தனர்.

டப்ளின் பத்திரிகைகளின் வாசகத்தைப் படிக்கும்பொழுதெல்லாம் தான்பிரீன் மனக் கொதிப்படைந்தான். அவை தொண்டர்களுடைய செய்கைகளை, முக்கியமாக ஆஷ்டவுன் போராட்டத்தை வெகு இழிவாகக் கண்டித்து வசை மாரி பொழிந்துவந்தன. அவற்றுள் 'ஐரிஷ் டைம்ஸ்' என்ற ஆங்கிலேயருடைய பத்திரிகை உள்று. அது தன் இனத்தாரையே ஆதரித்தெழுவது இயற்கை. 'பிரீமன்ஸ் ஜேர்னல்' என்ற பத்திரிகையை புரட்சிக்காரர்கள் கையில் எடுத்துப் பார்ப்பது கூடக்கிடையாது. ஆனால், ஐரிஷ் இன்டிப்பென்டென்ட் (ஐரிஷ் சுதந்தரம்) என்ற பத்திரிகை ஐரிஷ் மக்களின் பண உதவியால் அவர்களுடைய நன்மைக்காகவே நடத்தப்படுவதாய்ச் சொல்லப்பட்டு வந்தது. அப்பத்திரிகை ஆஷ்டவுன் போராட்டத்தைப் பற்றி எழுதும் பொழுது, 'கொலைகாரர்கள், கொடுங்குற்றம், அக்கிரமம், படுகொலை' முதலிய கடுமையான பதங்களை உபயோகத்திருந்தது. அவற்றைக் கண்ணுற்றவுடன் அப்பத்திரிகைக்கு ஒரு பாடம் கற்பித்து அதன்மூலம் மற்றப் பத்திரிகைகளும் திருந்தும்படி செய்ய வேண்டும் என்று தான்பிரீன் தீர்மானித்தான். அப்பொழுது அவன் படுத்த படுக்கையாக் கிடந்ததால், மற்ற நண்பர்கள் அவ்வேலையை மெற்கொண்டனர். தேசத்திற்காக மார்ட்டின் சாவேஜ் உயிர்நீத்து அவனுடைய சரீரத்தை அடக்கஞ் செய்வதற்கு முன்னாலேயே, இன்டிப்பென்டென்ட் அவனுடைய ஆன்மாவைப் பழித்துக் கூறியதற்குப் பழிவாங்க வேண்டும் என்று அவர்கள் துணிந்தனர். அப்பத்திரிகையின் ஆசிரியரைச் சுட்டுத்தள்ளிவிடலாமா என்று யோசித்தனர். பின்னர் அது வேண்டாம் என்றும் பத்திரிகையைக் கொஞ்சம் அடக்கிவைத்தாலே போதும் என்றும் முடிவுசெய்தனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பீடர் கிளான்ஸியின் தலைமையில், சுமார் முப்பது தொண்டர்கள் இன்டிப்பென்டென்ட் காரியாலயத்தை நோக்கிச் சென்றனர். அங்கு சென்றதும் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களையும் எழுது வினைஞர்களையும் எழுந்து விலகி நிற்கும்படி உத்தரவிட்டார்கள். துப்பாக்கிகளைக் கண்டதும் எல்லோரும் வாய்பேசாது உத்தரவுக்குப் பணிந்து நின்றனர். ஆசிரியருக்கும் அதேகதிதான் நேர்ந்தது. தொண்டர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த அச்சு யந்திரங்களையும் எழுத்துக்கோர்க்கும் யந்திரங்களையும் தகர்த்தெறிந்தனர். மறுநாள் முதல் பத்திரிகை நடக்காமல் இருப்பதற்கு எவ்வளவு இடையூறு செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டு, அவர்கள் வெளியேறிச்சென்றனர். ஆனால் மறுநாள் பத்திரிகை வெளிவந்து விட்டது. அதன் ஆசிரியர் வேறு அச்சுக்கூடங்களின் உதவியால் அதை வெளியிட ஏற்பாடுகளைச் செய்தார். 'இன்டிப்பென்டென்ட்' பத்திரிகாலயத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களில் பலர் புரட்சிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களைச் சேர்ந்த தொண்டர்கள் வந்தவுடன் அவர்க

99