பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


ளோடு ஒத்துழைப்பதுபோல், எதிர்க்காமல் பேசாதிருந்துவிட்டனர். எனினும் ஆசிரியர் அவர்களின் யாரையும் வேலையில் இருந்து நீக்கவில்லை.

'இன்டிப்பென்டென்ட்' தாக்கப்பட்டதிலிருந்து மற்றப் பத்திரிகைகளெல்லாம் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டன. அதன்பிறகு டப்ளின் பத்திரிகை எதுவும் தொண்டர்களுடைய செய்கைகளைப் பற்றி அவதூறாக எழுதுவதில்லை. 'இன்டிப்பென்டென்ட்' பத்திரிகை கூட நாளடைவில் மாறுதலடைந்து, பிற்காலத்தில் பிரிட்டிஷார் செய்த கொடுமைகளையெல்லாம் கண்டித்து வந்தது.

மார்ட்டின் லாவேஜினுடைய பிரேத விசாரணைக்குப் பிறகு சரீரம் அவன் உறவினரிடம் கொடுக்கப்பட்டது. டப்ளினிலிருந்த மர்தாகோயில்களின் அதிகாரிகள் அப்பிரேதத்தைத் தங்கள் இடுகாடுகளில் புதைக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர். பின்னர் அச்சடலம் பல்லிஸொடேர் என்னும் இடத்திற்குக் கொண்டு போகப்பட்டது. அதுதான் ஸாவேஜின் ஊர். அங்கு மக்கள் பிரேதத்தைத் தொடர்ந்து பலமைல் நீளமுள்ள ஊர்வலமாகச் சென்றனர். அவ்வூர்ப் பாதிரியார் சவக்குழியின் பக்கத்தில் நின்று கடைசிப் பிரார்த்தனையைக் கூறினார். அப்பொழுது பல ஐரிஷ் கான்ஸ்டபிள்கள் உருவிய கத்தியும், நீட்டியதுப்பாக்கியுமாகக் குழியைச் சுற்றி நின்றனர். கலவரமேற்படாமல் பாதுகாப்பதற்காகவே அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்.

சில நாட்களுக்குப் பின்னால் தான்பிரீன் டூமி அம்மையாரின் வீட்டிலிருந்து புறப்பட்டு கிரந்தான் தெருவில் 13ஆம் எண்ணுடைய வீட்டிற்குச் சென்று வசித்துவந்தான். அங்கு மலோனும், அவருடைய மனைவியும், இரண்டு பெண்களும் தங்கியிருந்தார்கள்.

மலோன் 1916ஆம் ஆண்டு ஈஸ்டர்கலகத்தின் போது போராட்டத்தில் தமது மகனை இழந்தவர். அதுமுதல் கணவனும், மனைவியும் இதர தொண்டர்களைத் தமது மகன் மைக்கேலைப் போலவே பாவித்து அன்புடன் ஆதரித்து வந்தனர். சிலநாட்கள் கழிந்தபின் தான்பிரீன் டிரீஸியையும் ஹோகனையும் அங்கு அழைத்து வந்து மலோன் குடும்பத்தாரை அறிமுகம் செய்துவைத்தான். மலோனின் பெண்களான பிரிஜிட்டும் எயினியும் பெண்களுடைய சுதந்திரச் சங்கத்தில் அங்கத்தினராக இருந்து தீவிரமாக வேலை செய்து வந்தார்கள். அவர்கள் தான்பிரீனுடைய தபால்களை விநியோகம் செய்வதற்கும் அங்கிருந்து திப்பெரரிக்கு அனுப்ப வேண்டிய வெடிமருந்தையும் துப்பாக்கியையும் கிங்ஸ் பிரிட்ஜ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய் ரயிலில் அனுப்புவதற்கும் மிக்க உதவியாயிருந்தனர். தான்பிரீன் தன் கையில் கிடைக்கும் சகல ஆயுதங்களையும் தோட்டாக்களையும் உடனுக்குடன் திப்பெரரிக்கு அனுப்பி விடுவது வழக்கம். அங்குள்ள சில வியாபாரிகளுடைய விலாசங்களுக்கே அவன் அனுப்புவான். வியாபாரிகளுக்குச் சாமான் வருகிற விபரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும். சர்க்கார் அந்தச்சாமான் பெட்டிகளைப் பற்றிச் சந்தேகமே கொள்வதில்லை.

100