பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

21
திருமணம்


தான்பிரீன் நிலையாக ஓரிடத்திலே தங்கியிருக்க முடியவில்லை. அடிக்கடி இடம் மாற்றிக்கொண்டேயிருந்தான். ஏனெனில், இங்கிலாந்து ஆயிரக்கணக்கான புதிய சிப்பாய்களை அயர்லாந்துக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தது. இங்கிலாந்திலுள்ள சிறைச்சாலைகளெல்லாம் காலியாகி, அவைகளிலிருந்த பேடிகளும் தூர்த்தர்களும் அயர்லாந்தின் மிது கவிழ்ந்து விடப்பட்டனர் அந்தக் கொலைகாரர்கள் உயிரைப் பழிவாங்கினாலும், எத்தனை ஊர்களைக் கொள்ளையடித்தாலும், தீ வைத்து எரித்தாலும் கேள்வி கேட்பதில்லை என்று அதிகாரிகள் அவர்களுக்கு உறுதிமொழி கொடுத்தனர்.

இதுகாறும் தான்பிரீன் தனிமையாகவே வாழ்ந்தான். தேசத்தில் புரட்சிப் போர் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது. அவனுடைய உயிருக்கு எந்த நேரம் ஆபத்து என்பது தெரியாமலிருந்தது. அவனுடைய தலையைக் கொய்து சர்க்காரிடம் கொடுப்பவர்களுக்குக் கை நிறையப் பொற்குவியல் கிடைத்திருக்கும். நாடும், நகரும் நன்கு அறியும்படி அவன் கலகக்காரருடைய தலைவன் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நிலையில் அவன் திருமணம் செய்து கொண்டான். 1921 ஜூன் மாதம் 12ஆம் தேதி ஆங்கிலேயருக்கும் அயர்லாந்திற்கும் சமாதானம் ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அத்திருமணம் நிறைவேறியது.

135