பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


யுத்த காலத்திலும் அதற்கு முன்னும் மொத்தம் ஏழு வருடகாலம் அயர்லாந்தில் பொதுத் தேர்தலே நடக்கவில்லை. 1918ஆம் ஆண்டுதான் புதிதாய்த் தேர்தல் ஆரம்பமாயிற்று. இடையில் மக்களுடைய மனோபாவத்தில் விசேஷ மாறுதல் ஏற்பட்டிருந்தது. அவர்கள் இங்கிலாந்திடம் கொஞ்சமும் நம்பிக்கை வைக்கவில்லை; தங்களுடைய பிரதிநிதிகளைச் சீமைப் பார்லிமென்டுக்கு அனுப்புவதில் எவ்வித பயனுமில்லை என்பதை உணர்ந்திருந்தார்கள். அயர்லாந்துக்குச் சுயாட்சி கொடுக்கும் விஷயமாக இங்கிலாந்து செய்த நம்பிக்கை மோசமும், அது தயவு தாட்சண்யமின்றி இயற்றிய கட்டாய ராணுவச்சட்டமும் மக்களுடைய மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தன. 1916ஆம் ஆண்டு நடந்த சுதந்திரக் கலகம் அவர்களிடையே ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்கி விட்டது. அதனால் அவர்களுக்குப் புத்துயிரும் புதிய தைரியமும் உண்டாயின. தங்குதடையற்ற பரிபூரணமான சுதந்திரத்தையே அவர்கள் வேண்டினார்கள். முன்னால் நடத்த உபதேர்தல்களிலேயே இக்கருத்தை அவர்கள் வெளியிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தேர்ந்தெடுத்த இரு பிரதிநிதிகளும் குடியரசுக் கொள்கையுடையவர்கள். இப்பொழுது பொதுத்தேர்தலின் மூலம் மக்கள் குடியரசையே ஆதரித்து நின்றார்கள் என்பதை அறிவிக்க ஒர் அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி ஐரோப்பிய யுத்தம் முடிந்தது. அதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னால் டிசம்பர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் முதல் முதலாக வயது வந்த சகலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆதலால் ஸின்பீன் இயக்கத்துக்கு மக்கள் எவ்வளவு ஆதரவு காட்டினார்கள் என்பதைப் பரீட்சித்துப் பார்க்க அதுவே தக்க சந்தர்ப்பமாயிற்று.

மக்களிடையே மிகுந்த பிரசாரம் செய்யவேண்டியிருந்தது. ஸின்பீன் இயக்கத்தைப் பற்றி அவர்களிடையே பல தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்கள் அரசியல் கட்சியான ஸின்பீனையும், பட்டாளப் பயிற்சிபெற்ற ஐரிஷ் தொண்டர் படையையும் நன்றாய்ப் பாகுபாடு செய்து தெரிந்துகொள்ளவில்லை. 1916ஆம் ஆண்டு கலகம் ஸின்பீன் கலகம் என்றழைக்கப்பட்டது. தொண்டர்கள் லின்பீன் தொண்டார்கள் என்று கருதப்பட்டது. இவ்வாறு ஸின்பினுக்கும் தொண்டர் படைக்குமுள்ள வித்தியாசத்தை மக்கள் தெரிந்துகொள்ளாமலிருந்ததால், பெருத்த நஷ்டமொன்றும் ஏற்பட்டுவிடவில்லை. ஏனென்றால் நாளடைவில் ஸின்பீன் கட்சியார் குடியரசுக் கொள்கையை ஒப்புகொண்டு வந்தனர். தேர்தல் காலத்தில் எல்லாக் கிராமங்களிலும் நகரங்களிலும் ஸின்பின் சங்கங்கள் தோன்றின. ஒரு சங்கத்தினுடைய தலைவரோகாரியதரிசியோ உள்ளூர்த் தொண்டர்படையின் தளகர்த்தராகவும் இருப்பது சகஜம். ஸின்பின் கட்சியிலிருந்த பெரும்பாலான வாலிபர்கள் தொண்டர்படையிலும் ஊழியர்களாய்ப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

53