பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


கொண்டு தயாராய்நின்றனர். கதவு திறக்ககப்பட்டது. அடுத்த வீட்டுக்காரன் ஒருவனே ஏதோகாரியமாக அங்கு வந்திருந்தான். அவன் விளையாட்டாகவே போலிஸ் என்று சொன்னானாம்! அவன் போனவுடன் தொண்டர்களுடைய கைகளில் துப்பாக்கிகளைக் கண்ட குடியானவன், 'துப்பாக்கி ஆசாமிகளுக்கு இங்கு இடமில்லை, வெளியேறுங்கள்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. வானமே கூரையாகப் பூமியைப் பாயாகக் கொண்டு, அவர்கள் வெளியேறினர். வழக்கம்போல் வழிநடையை மேற்கொண்டனர். கிழிந்த ஆடைகளும், கேடுற்ற பூட்ஸ்களும், அவர்களைக் குளிரில் வாட்டி வருத்தின. அவர்கள் எதிர்பார்த்துச் சென்ற நண்பர்கவில் பலர் தங்க மாட்டுத்தொழுவங்களிலே கூடத் தங்க இடம் கொடுக்கவில்லை. துன்பம், துணுக்கம், பசி, கால்வலி, விழிப்பு இவற்றைத் தவிர வேறொன்றும் அவர்களுக்குத் துணை நிற்கவில்லை. எவ்வளவு சுற்றியும் அவர்கள் ஸோலோஹெட்பக்கிலிருந்து பத்துமைல் தூரத்திற்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தனர்.

டோனோ என்னும் கிராமத்தில் அவர்கள் தங்கியிருக்கையில் அவர்களுடைய பழைய நண்பன் ஸீமஸ் ராபின்ஸன் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். ராபின்ஸன் வெடிமருந்து வேட்டையில் அவர்களுடன் இருந்தவன். பல வருஷங்கள் பிரிந்த நண்பனை மீண்டும் கண்டபோது யாவரும் ஆனந்தம் கொண்டனர். பாடி ரியான் என்னும் தேசபக்தரான வர்த்தகர் ஒருவர் அவர்களுக்கு மிகுந்த உதவி செய்தார். அக்காலத்தில் அவர்கள் மக்களைத் தங்கள் வசப்படுத்தித் தேசத்தில் பெரும் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் திட்டங்கள் போடுவதில் பொழுதைப் போக்கிவந்தனர். அவர்களுடைய தீவிரமான திட்டம் எதையும் டப்ளின் தலைநகரில் இருந்த தலைமைக் காரியாலயத்தார் ஏற்றுக்கொள்ளவழியில்லை. ஆயினும் தலைநகரில் இருந்த நண்பர்கள் சிலர் தான், பிரீன் கூட்டத்தாரை அமெரிக்காவுக்கு ரகசியமாக அனுப்பிவிட வேண்டும் என்று ஒரு கப்பலைத் தீர்மானித்து வைத்து அவர்களைத் தயாராய் இருக்கும்படி தகவலும் சொல்லி விட்டனர். தான்பிரீன் அதைக் கேட்டுக் கோபமடைந்தான். தன்னையும் நண்பர்களையும் தேசப்பிரஷ்டம் செய்வதற்கே இந்தச்சதி செய்யப்பட்டதாக எண்ணி, மனம் வாடினான். தலைமை நிலையத்தார்.அவர்களுக்கு உதவி செய்து போரை மேலும் நடத்த வேண்டியிருக்க அதை விட்டொழித்து, அவர்களையும் நாடு கடத்தத்துணிந்து விட்டனரே என்று தொண்டர்கள் மனக் கசப்படைந்தனர். எது நேரினும் அயர்லாந்தை விட்டு வெளியேற முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டனர்.

டோனோவிலிருந்து 'அப்பர் சேர்ச்' வழியாக அவர்கள் நகருக்குச் சென்றனர். அங்கேதங்களுடைய யுத்த சபைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். தலைமை அதிகாரிகள் உத்தரவு கொடுக்காவிட்டாலும், தாங்களாகவே வேலையை ஆரம்பித்து விட முடிவுசெய்தனர். திப்பெரரியில் தங்கியிருந்த ராணுவத்தார் உடனே

67