பக்கம்:தாய்லாந்து.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அறிமுகப்படுத்தியவர். இந்த ஐந்தாம் ராமாதான் என்றும் சொன்னார்கள்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே காலனி ஆதிக்கத்துக்கு உட்படாமல் தப்பிய ஒரே நாடு தாய்லாந்து என்பதைக் கேள்விப்படும்போது சற்று வியப்பாகவே உள்ளது.

அதே போல் கம்போடியா, லாவோஸ், வியட்நாம் போன்ற கம்யூனிஸ் நாடுகள் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் நிலையிலும் கம்யூனிஸ விதை தாய்லாந்து மண்ணில் விளையாமல் பார்த்துக் கொண்டதும் இந்த மன்னர்கள்தானாம்!

ஐந்தாம் ராமா வாழ்ந்த அரண்மனை இப்போது கண்காட்சியாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் அந்த அரண்மையைப் பார்க்கும் ஆவலில் உடனே அங்கு போனோம்.

”இந்த அரண்மனை முழுவதும் தங்கத் தேக்கு மரத்தால் கட்டப்பட்டது. தேக்கு மரங்களால் ஆன இவ்வளவு பெரிய கட்டிடம் உலகில் வேறு எங்குமே கிடையாது” என்று அடித்துச் சொன்னார் அரண்மனையைச் சேர்ந்த ஒரு சிப்பந்தி.

முப்பத்திரண்டு அறைகள் கொண்ட மிகப் பெரிய ராஜ மாளிகை குளுகுளுவென்ற சூழ்நிலை. இதைவிட பிரம்மாண்டமான அரண்மனைகளை ரஷ்யா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நான் பார்த்திருந்தாலும் தேக்கு மரங்களின் முழு ஆக்கிரமிப்பை இந்த அரண்மனையில்போல் வேறெங்கும் காண முடியவில்லை. தாய்லாந்தின் தேசிய சொத்தான இந்த தேக்கு மரச் செல்வத்தைப் பற்றி நிறையச் சொல்ல வேண்டும்.

அரண்மனையைச் சுற்றிக்காட்டிய பெண் கய்டு பேசியது ஆங்கிலம் என்பதைப் புரிந்து கொள்ளவே சிறிது நேரமாயிற்று.

அப்படி துண்டு துண்டாகக் கொத்திக் கொத்திப் பேசினார்.

அரண்மனையில் ஓரிடத்தில் மாட்டப்பட்டிருந்த விக்டோரியா மகாராணியாரின் இளம் வயது புகைப்படம் ஒன்றைச் சுட்டிக்காட்டி, ”இந்தக் குழந்தை யாரென்று உங்களால் சொல்ல முடியுமா?” என்று ஒரு புதிர் போட்டாள் அந்த கய்டு.

அங்கே வந்திருந்த டுரிஸ்ட் ஒருவர் “பேபி விக்டோரியா” என்று சொன்னதும் கலெக்ட் என்று தாய்லாந்து உச்சரிப்பில் ஆமோதித்தார் கய்டு. அதாவது கரெக்ட் என்பதைத்தான் அப்படிச்சொன்னாள்! வீதிகளில் செல்லும் போது தாய்லாந்து மொழி.

32
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/31&oldid=1075201" இருந்து மீள்விக்கப்பட்டது