பக்கம்:தாய்லாந்து.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


9

நாங்கள் சந்தித்த புத்த பிட்சுவின் பெயர் கிர்த்திகுலோ. முப்பதே வயது நிரம்பிய அந்தத் துறவியின் முகத்தில் இளமையைவிட அறிவு முதிர்ச்சியே அதிகம் பளிச்சிட்டது.

நீண்டகாலமாக என்னுள் முடங்கிக் கிடந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினேன்.

“புத்த மதமோ அகிம்சையைப் பிரதானமாகப் போதிக்கிறது. ஆனால், புத்தமதம் ஆழமாகப் பரவியுள்ள தாய்லாந்திலோ பெரும்பாலான மக்கள் அசைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது முரண்பாடாக இல்லையா?”

இந்தக் கேள்வி கிர்த்திகுலோவிடம் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. புன்முறுவலோடு என்னைப் பார்த்தார்.

“உணவுப் பழக்கம் என்பது அவ்வளவு எளிதாக வளைந்து கொடுத்து விடக் கூடியதல்ல. மேலும் புத்தமதக் கோட்பாடுகள் ஒருவரின் உணவுப் பழக்கத்தின் மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அவரவர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறது என்பதைத் தவிர வேறு விளக்கம் ஏதுமில்லை“ என்றார்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் தெரிந்து கொண்ட சில விவரங்கள்:

இருபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட எவரும் புத்த பிட்சுவாக மாறலாம். இதற்குச்சில அடிப்படைப் பயிற்சிகள் தேவை. பிட்சுவாக மாறியபின் அவர்கள் குடும்பத்தாருடன் சேர்ந்திருக்க அனுமதி இல்லை. எனினும், இனி புத்த பிட்சு வாழ்க்கை வேண்டாம் என்று எப்போது முடிவெடுத்தாலும் அப்போதே அவர்கள் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம்.

பெண்கள் பிட்சுக்களாக மாற அனுமதி இல்லை.

64
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/62&oldid=1075252" இருந்து மீள்விக்கப்பட்டது