பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

மக்சீம் கார்க்கி


பாவெல் அவனுக்கு முன்னால் வந்து நின்று, சிஸோவையும் ரீபினையும் சுட்டிக்காட்டிக்கொண்டு உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.

“கூலிக் குறைப்பு பற்றிய உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று உங்களிடம் கோரும்படி எங்கள் மூவரையும் தோழர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.”

“ஏன்?” என்று பாவெலைப் பார்க்காமலேயே கேட்டான் மானேஜர்.

“ஏனென்றால், இந்த மாதிரியான தலைவரிவிதிப்பு அநியாயமானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று உரக்கக் கூவினான் பாவெல்.

“சதுப்பு நிலத்தைச் சரிபண்ணுவது தொழிலாளர்களது நன்மைக்காக அல்லாமல், அவர்களைச் சுரண்டுவதற்காகச் செய்த காரியம் என்றா நீ கருதுகிறாய்? அதுதானே உன் எண்ணம்?”

“ஆம்” என்றான் பாவெல்.

“நீயும் கூடவா?” என்று ரீபினைப் பார்த்துக் கேட்டான் மானேஜர்.

“நாங்கள் எல்லாருமே அப்படித்தான் நினைக்கிறோம்.”

“ஏனப்பா, நல்லவனே! நீயுமா?” என்று சிஸோவைப் பார்த்துக் கேட்டான்.

“நானும்தான். எங்கள் காசை எங்களுக்கு விட்டுக்கொடுப்பதுதான் நல்லது.”

சிஸோவ் மீண்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, குற்றம் செய்தவனைப்போல் லேசாகச் சிரித்துக்கொண்டான்.

மானேஜர் அந்த ஜனத்திரள் முழுவதையும் மேலோட்டமாகப் பார்த்தான்; தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். பிறகு அவன் பாவெலிடம் திரும்பி, அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னான்:

“உன்னைப் பார்த்தால் படித்தவன் மாதிரி தோன்றுகிறது. உனக்குக்கூடவா இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய நன்மைகளை உணர முடியவில்லை?”

“தொழிற்சாலை நிர்வாகத்தின் சொந்தச் செலவிலே அந்த நிலத்தைச் சீர்பண்ணினால்தான் எங்களுக்கும் அதன் நன்மைகளை உணர முடியும்!” என்று எல்லாருக்கும் கேட்கும்படியாகச் சொன்னான் பாவெல்.