பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

மக்சீம் கார்க்கி


“அவர்கள் எல்லாரும் ஒரு நாள் இதை உணரத்தான் போகிறார்கள்” என்று அவனை உற்சாகப்படுத்தும் முறையில் பேசினாள் பெலகேயா.

அவர்கள் சென்றவுடன் அவள் கதவைத் தாளிட்டாள்; அறைக்கு நடுவில் வந்து முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தாள். வெளியே பெய்யும் மழையின் ஒலியையே சுருதியாகக்கொண்டு அவள் பிரார்த்தனையில் ஈடுபட்டாள். அப்பிரார்த்தனையில் வார்த்தைகள் இல்லை. அவளது வாழ்க்கையிலே பாவெல் புகுத்திவிட்ட மக்களைப் பற்றிய ஒரு பெரும் சிந்தனையே பிரார்த்தனையாயிற்று. அவளுக்கு எதிராக உள்ள தெய்வ விக்ரகங்களுக்கும் அவளுக்கும் இடையில் அந்த மக்கள் நகர்ந்து செல்வதாகப்பட்டது. அந்த மனிதர்கள் விசித்திரமாக ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாக, ஆனால் தனியர்களாக இருந்தார்கள்.

அதிகாலையிலேயே அவள் மரியா கோர்சுனவாவைப் பார்க்கக் கிளம்பிப் போனாள்.

அந்தச் சாப்பாட்டுக்காரி வழக்கம் போல ஒரே ஆரவாரத்தோடு அன்போடு தாயை வரவேற்றாள்.

“வருத்தமாயிருக்கிறாயா?” என்று தனது எண்ணெய்க் கையால் தாயின் தோளைத் தட்டிக்கொண்டே கேட்டாள்: “வருத்தப்படாதே. அவர்கள் அவனைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். இல்லையா? போனால் போகட்டும்! அது ஒன்றும் வெட்கப் படுவதற்குரிய விஷயமில்லை. முன்னேயெல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களைச் சிறையில் தள்ளினார்கள்; இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள். பாவெல் பெரிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. எல்லோருக்காகவும் அவன் கிளர்ந்தெழுந்தான். அனைவரும் அவனைப் புரிந்துகொள்கிறார்கள். அதனால் நீ அதை நினைத்து வருத்தப்படாதே. எல்லாரும் பேசுவதில்லை, ஆனால் நல்லவர் யார் என்று அனைவருக்கும் தெரிகிறது. நானே உன்னைப் பார்க்க வரவேண்டுமென்றிருந்தேன். ஆனால் நேரமே கிடைக்கவில்லை. சமையல் செய்வதற்கும் சாப்பாடு விற்பதற்குமே நாள் முழுதும் சரியாய்ப் போய்விடுகிறது. ஆனால் உனக்கு நன்றாகத் தெரியும் என்னதான் உழைத்தாலும், நான் என்னமோ பிச்சைக்காரியாய்த்தான் சாகப்போகிறேன். என் காதலர்களே என்னைத் தின்று தீர்த்துவிடுவார்கள். இங்கே கண்டால் இங்கே, அங்கே கண்டால் அங்கே - எங்கேயும் அவர்கள் என்னைப் பாச்சைமாதிரி பிய்த்துத்தான் பிடுங்குகிறார்கள். அப்படியும் இப்படியுமாய் நான் பத்து ரூபிளை