பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

மக்சீம் கார்க்கி


அளவுக்குப் பிய்ந்துபோய்விட்டன. எனவே தினம் தினம் என் கால்கள் ஈரமாவதுதான் மிச்சமாயிருக்கிறது. பழைய சமுதாய அமைப்பைப் பகிரங்கமாக எதிர்த்துப் போராடுகிறவரையிலும் நான் சாகமாட்டேன். நான் செத்து மண்ணோடு மண்ணாகப் போக விரும்பவில்லை. எனவே நாம் ஆயுதம் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற தோழர் சமோய்லவின் ஆலோசனையை நான் நிராகரிக்கிறேன். அதற்குப் பதிலாக, நான் ஒரு திருத்தப் பிரேரேபணை கொண்டு வருகிறேன். முதன் முதலில் நான் என் கால்களில் ஒரு ஜோடி புது பூட்சுகளை ஆயுதம் போலத் தரித்துக்கொள்கிறேன். நாமெல்லோரும் கண்மூடித்தனமாகப் போராட முனைவதைவிட, இப்படிப்பட்ட நடவடிக்கை அதாவது நான் பூட்ஸ் தரித்துக்கொள்ளும் நடவடிக்கை —சோஷலிசத்தின் வெற்றியைத் துரிதப்படுத்தும் என்பது எனது அசைக்க முடியாத. தீர்மானமான நம்பிக்கை!”

இந்த மாதிரியான வேடிக்கைப் பேச்சோடு பேச்சாய், அன்னிய நாடுகளில், மக்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையைச் சுலபமாக்கிக்கொள்ளப் போராடுகிறார்கள் என்பதையும் அவன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். அவனது பேச்சு தாய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் மனத்தில் ஏதோ ஒரு அதிசயப் பற்றுதல் உண்டாயிற்று. பொறாமையும் குரோதமும் வஞ்சகமும் கொடுமையும் நிறைந்து, தொந்திதள்ளிப்போன சிவந்த மூஞ்சிக்காரர்கள்தாம் மக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றிப் பிழைத்து வரும் பரம வைரிகள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆட்சியாளரின் கொடுமையால் நசுக்கப்பட்டுக்கிடக்கும் மக்களை அவர்கள் மன்னனுக்கு எதிராகத் தூண்டிவிடுவார்கள். மக்கள் மன்னனை எதிர்த்துப் போராடிக் கவிழ்த்தவுடனே இந்தக் குள்ள மனிதர்கள் மக்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றி அதிகாரத்தைத் தாங்களே கைப்பற்றிக்கொள்வார்கள். மக்களை விரட்டியடிப்பார்கள்; மக்கள் எதிர்த்துப் போராட முனைந்தால் அவர்களை ஆயிரம் ஆயிரமாகக் கொன்று குவிப்பார்கள்.

ஒருநாள் தாய் தனது தைரியத்தையெல்லாம் சேகரித்துக்கொண்டு. இகோரின் பேச்சுக்களால் தன் மனத்தில் தோன்றியுள்ள கற்பனைச் சித்திரத்தை அவனிடம் விளக்கிக்கூற முனைந்தாள்.

“நான் சொல்வது சரிதானே, இகோர்?” என்று அசட்டுச் சிரிப்போடு கேட்டாள் அவள்.

அவன் கடகடவென்று சிரிக்கத் தொடங்கினான்; சிரிக்கும்போது அவனது கண்மணிகள் உருண்டு புரண்டன மூச்சு வாங்கும்போது அவன் நெஞ்சைத் தடவிக் கொடுத்துக்கொண்டான்.