பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

மக்சீம் கார்க்கி


அவளோ அவனது கைகளை இறுகப் பிடித்தவாறு இரகசியமாகச் சொன்னாள்.

“உஷ்! ஐயோ, என் கண்ணே என் அருமை மகனே..........”

‘ஒரு நிமிஷம் பொறுங்கள். அது எப்படி நடந்தது என்று நான் சொல்கிறேன்” என்று கரகரத்துச் சொன்னான் ஹஹோல்.

“இல்லை, வேண்டாம். வேண்டவே வேண்டாம், அந்திரிபூஷா” என்று அவள் தனது நீர் நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்து முணுமுணுத்தாள்.

பாவெல் மெதுவாக நெருங்கி வந்தான், அவனது கண்களிலும் ஈரம் கசிந்திருந்தது. அவனது முகம் வெளுத்திருந்தது. அவன் லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான்:

“நீதானோ என்று அம்மா பயந்துவிட்டாள்!”

“நானா—நானா பயந்தேன்? நான் அதை நம்பவேமாட்டேன். என் கண்ணாலே பார்த்தால்கூட நான் நம்பமாட்டேன்!”

“பொறுங்கள்” என்று தன் தலையை உலுப்பிக்கொண்டும் கைகளை விடுவிக்க முயன்றுகொண்டும் சொன்னான் ஹஹோல்.

“அது நான் இல்லை. ஆனால் நான் அதைத் தடுத்திருக்க முடியும்........”

“அந்திரேய்! வாயை மூடு” என்றான் பாவெல்.

அவன் தன் நண்பனது கையை ஒரு கையால் பற்றிப் பிடித்தான்; மறுகையை ஹஹோலின் தோளின்மீது போட்டு, நடுநடுங்கும் அவனது நெடிய உருவத்தை தடவிக்கொடுத்தான். அந்திரேய் பாவெலின் பக்கம் திரும்பி உடைந்து கரகரக்கும் குரலில் பேசினான்.

“பாவெல், அப்படி நடக்கவேண்டும் என்று நான் விரும்பியிருக்கமாட்டேன் என்பது உனக்குத் தெரியும். நடந்தது இதுதான். நீ போன பிறகு நான் திரானவுடன் அந்த மூலையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது இஸாய் வந்தான்: எங்களைக் கண்டதும் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றுகொண்டு எங்களை ஓரக்கண் போட்டுச் சிரித்தான், ‘அவனைப் பார். அவன் இரலெல்லாம் என் பின்னாலேயே சுற்றித் திரிகிறான். அவனை நான் அடிக்காமல் விடப்போவதில்லை’ என்றான் திரானவ். பிறகு அவன் போய்விட்டான். வீட்டுக்குத்தான் போகிறான் என்று நான் நினைத்தேன். பிறகு இஸாய் என்னிடம் வந்தான்.........”

ஹஹோல் பேச்சை நிறுத்திவிட்டு மூச்செடுத்துக்கொண்டான்.