பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

211


அந்தப் பூமி அவன் காலடியிலேயே கிடந்தாலும் சரி, அல்லது ஆகாசத்தோடு போய் ஒட்டிக்கொண்டாலும் சரி. அவனுக்கு அது நன்றாகச் சாப்பாடு மட்டும் போட்டால் போதும்!”

“அடிமை வாழ்வின் சரித்திரம்” என்ற ஒரு புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து வாசித்தான் எபீம். “இதென்ன, நம்மைப்பற்றிய புத்தகமா?”

“இந்தப் புத்தகத்தில் நமது ருஷ்ய அடிமை வாழ்வைப் பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பாவெல் அவனிடம் வேறொரு புத்தகத்தை எடுத்து நீட்டினான், எபீம் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். பிறகு அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்:

“இதெல்லாம் பழைய காலத்து விவகாரம்,”

“சரி, உங்களுக்குச் சொந்தமாக நிலம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான் பாவெல்.

“இருக்கிறது. எனக்கும் என் சகோதரர் இருவருக்கும் சுமார் பத்தரை ஏக்கர் நிலம் இருக்கிறது. எல்லாம் ஒரே மணல் வெளி. பாத்திரம் விளக்க உதவுமே ஒழிய, பயிர் செய்ய உதவாத மண்”

ஒரு கணம் கழித்து மீண்டும் அவன் பேசத் தொடங்கினான்:

“நான் நிலத்தை விட்டுவிட்டேன். அதை வைத்துக் கொண்டு என்ன பிரயோஜனம்? சும்மா நம்மை வேலையில்லாமல் கட்டித்தான் போடும்; உணவு தராது. நாலு வருஷ காலமாய். நான் பண்ணைக் கூலியாளாகத்தான் வேலை பார்த்து வருகிறேன். மழைக்காலத்துக்குப் பிறகு நான் ராணுவ சேவைக்கும் செல்ல வேண்டும். ‘பட்டாளத்துக்குப் போகாதே. இப்போதெல்லாம் சிப்பாய்களைக் கொண்டு ஜனங்களை அடிக்கச் சொல்லுகிறார்களாம்’ என்று மாமா மிகயீல் சொன்னார். ஆனால் நான் போய்ச்சேரத்தான் எண்ணியிருக்கிறேன். ஸ்திபான் ராசின், புகச்சோவ் முதலியவர்கள் காலத்திலும் கூட, பட்டாளத்துக்காரர்கள் ஜனங்களை அடித்து நொறுக்கத்தான் செய்தார்கள். இதுக்கொரு முடிவு கட்ட வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவன் பாவெலைக் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான்.

“ஆமாம். காலம் மாறத் தொடங்கிவிட்டது!” என்று இளம் புன்னகையுடன் சொன்னான் பாலெல். “ஆனால் காலத்தைப் பரிபூரணமாக மாற்றுவது மிகவும் கடினமான காரியம். நான் சிப்பாய்களிடம் என்ன சொல்லவேண்டும், எப்படிச் சொல்லவேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.”