பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

213


பூமியைத் தொட்டு உணர்கிறான். ஆனால் ஆலைத் தொழிலாளியோ, அப்படியல்ல. அவன் ஒரு சுதந்திரமான பறவை. நிலம், வீடு என்று எந்தப் பற்றுதலும் அவனுக்கு கிடையாது. இன்றைக்கு இங்கே, நாளைக்கு எங்கேயோ? ஒரு பெண்ணின் ஆசைகூட, அவனை ஒரே இடத்தில் இருத்தி வைத்துவிட முடியாது. அவனுக்கும் அவளுக்கும் ஏதாவது ஒரு சின்னத் தகராறு வந்தாலும்போதும் உடனே அவளை விட்டு விலகி, வேறொரு இடத்தைத் தேடிப் புறப்பட்டுப் போய்விடுவான். ஆனால் முஜீக் அப்படியல்ல. இடத்திலிருந்து நகராமல் தன்னைச் சுற்றி மேன்மைப்படுத்திக்கொள்ள திரும்புவான். சரி, இதோ உன் அம்மா வந்துவிட்டாள்!” என்று பேசி முடித்தான் ரீபின்.

“சரி, எனக்கு ஒரு புத்தகம் இரவல் கொடுப்பீர்களா?” என்று பாவெலிடம் நெருங்கி வந்து கேட்டான் எபீம்.

“தாராளமாய்” என்றான் பாவெல்.

அந்தப் பையனின் கண்கள் பிரகாசம் அடைந்தன. “நான் திருப்பித் தந்துவிடுவேன்” என்று அவன் அவசர அவசரமாக பாவெலுக்கு உறுதிகூற முனைந்தான். “எங்களூர்காரர்கள் இந்தப் பிரதேசத்துக்குத் தார் எண்ணெய் ஏற்றிக் கொண்டு அடிக்கடி வருவார்கள். அவர்கள் மூலம் கொடுத்தனுப்புகிறேன்.”

“சரி. போக நேரமாச்சு” என்று தனது கோட்டையும் பெல்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு கூறினான் ரீபின்.

“இதோ, படிக்கப் போகிறேன்” என்று ஒரு புத்தகத்தைச் சுட்டிக் காட்டியவாறு புன்னகையோடு கூறினான் எபீம்.

அவர்கள் சென்றவுடன் பாவெல் உணர்ச்சிவயப்பட்டவனாக அந்திரேயின் பக்கம் திரும்பினான்.

“இவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டான்.

“ஹும்” என்று முனகினான் ஹஹோல். “இரண்டு புயல் மேகங்கள் மாதிரிதான்!”

“மிகயீல் இருக்கிறானே. அவனைப் பார்த்தால் தொழிற்சாலையிலேயே வேலை பார்த்தவன் மாதிரி தோன்றவில்லை- அசல் முஜீக் ரொம்பப் பயங்கரமான ஆசாமி” என்றாள் தாய்.

“நீ இங்கே இல்லாமல் போனது ரொம்ப மோசம்” என்று அந்திரேயை நோக்கி, பாவெல் சொன்னான், அந்திரேய் மேஜைக்கு எதிராக அமர்ந்து, தன் எதிரே இருந்த தேநீர்க் கோப்பையை வெறித்துப்