பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

மக்சீம் கார்க்கி


கொண்டிருந்தது. அந்த வசந்த பருவத்தில் வாழ்க்கை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் எல்லோருடைய மனத்திலும் ஒரு புதிய உணர்ச்சி பூத்துக் கிளர்ந்தது. சிலருக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கான எரிச்சலும் புகைச்சலும்தான் மனத்தில் மூண்டது: அவர்கள் இந்தப் புரட்சிக்காரர்களை வாயாரச் சபித்தார்கள். சிலருக்கு ஒரு மங்கிய கவலையும் இனந்தெரியாத நம்பிக்கையுணர்ச்சியும் ஏற்பட்டன, சிலர்-அதாவது மிகவும் குறைந்த ஒரு சிலர் மட்டும்- தாம்தான் இந்த ஜனங்களைக் கிளறி விட்டதற்குப் பொறுப்பாளிகள் என்ற உணர்வினால் உள்ளுக்குள் மிகுந்த பூரிப்பும் உற்சாகமும் கொண்டுதிரிந்தார்கள்.

பாவெலுக்கும் அந்திரேய்க்கும் இப்போது எல்லாம் தூங்குவதற்குக்கூட முடியவில்லை, அவர்கள் காலை நேரத்தில்தான் திரும்பி வருவார்கள். வெளுத்துக் களைத்து என்னவோபோல் வந்து சேர்வார்கள். ஊரின் ஒதுக்குப் புறங்களிலும் காடுகளிலும் அவர்கள் கூட்டங்கள் நடத்திவந்தார்கள் என்பது தாய்க்குத் தெரியும். குடியிருப்பைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் இரவெல்லாம் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்பதும் துப்பறியும் வேவுகாரர்கள் எங்குப் பார்த்தாலும் ஊர்ந்து திரிந்து தனியாகச் செல்லும் தொழிலாளர்களை வழிமறித்து அவர்களைச் சோதனை போடுவதும் கூட்டங்கூட்டமாக வரும் தொழிலாளர்களைக் கலைந்து போகுமாறு செய்வதும் சில சமயங்களில் சிலரைக் கைது செய்து கொண்டு போவதுமாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். எந்த நேரத்திலும் கைதாகக் கூடிய நிரந்தரமான அபாயத்தில்தான் பாவெலும் அந்திரேயும் இருந்தார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும், அவர்கள் அப்படிக் கைதாக நேர்ந்தாலும், அவள் அதையும் வரவேற்கத்தான் செய்வாள், பின்னால் வரப்போகும் பெரும் ஆபத்துக்கு ஆளாவதைவிட, இப்போதே கைதாகிவிடும் ஆபத்து மேலானது என்பது அவள் எண்ணம்.

என்ன காரணத்தினாலோ இஸாயின் கொலை விஷயம் மறைக்கப்பட்டுவிட்டது. இரண்டு நாட்களாய் உள்ளூர்ப் போலீஸ்காரர்கள் புலன் விசாரித்தார்கள். சுமார் ஒரு டஜன் தொழிலாளர்களைக் கண்டு விசாரணை செய்த பின்னர் அவர்கள் அந்தக் கொலை வழக்கை விட்டுவிட்டார்கள்.

மரியா கோர்சுனவா தாயோடு பேசியபோது, போலீஸ்காரர்களின் அபிப்பிராயத்தை வெளியிட்டுச் சொன்னாள். மற்றவர்களோடு எவ்வளவு சமூகமாகப் பழகி வந்தாளோ, அதே மாதிரி அவள்