பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

7


ஆசாமியிடம் சர்வ ஜாக்கிரதையுடன் நடக்க முனைவார்கள். தங்களது தற்போதைய வாழ்வின் ஒழுங்கை அவர் கெடுத்துக் குலைத்து விடுவாரோ என்று அவர்கள் பயப்படுவது போலிருக்கும். இப்போதைய வாழ்க்கை சிரம ஜீவனம்தான் என்றாலும் அமைதியாகவும் குழப்பமற்றதாகவும் இருக்கிறதே என்பதே அவர்கள் அடையும் திருப்தி. நிரந்தரமாக ஒரே சுமையைத் தம்மை அழுத்தும் வாழ்க்கையை தாங்கிக் கொள்வது அவர்களுக்குப் பழகிப் போய்விட்டது. மேலும் தங்களது கஷ்டத்துக்கும் ஒரு நிவர்த்தி உண்டு என்ற நம்பிக்கையே அவர்களுக்கு இல்லையாதலால், தனது வாழ்க்கையில் புதியதாக வரும் எந்த மாறுதலும் தங்கள் துயரங்களையும் கஷ்டங்களையும் அதிகரிக்கத்தான் செய்யுமேயன்றி ஒருக்காலும் அவற்றைக் குறைத்துவிடப் போவதில்லை என்றே அவர்கள் கருதினார்கள்.

எனவே, புதுக் கருத்துக்களைக் காதில் போட்டுக் கொள்ளாமலேயே ஒதுங்கிச் செல்வார்கள் அவர்கள். அந்தப் புதிய ஆசாமிகளும் அங்கிருந்து மறைந்து போவார்கள். அங்கேயே தங்கும் ஒரிருவர் அங்குள்ளவர்களைப் போலவே நாளடைவில் வாழத் தொடங்குவார்கள். அவ்வாறு ஒருங்கிணைய முடியவில்லையென்றால் ஒதுங்கி வாழ்வார்கள்....

இப்படிச் சுமார் ஐம்பது வருஷங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான்.

2

இப்படித்தான் மிகயீல் விலாசவ் என்பவனும் வாழ்ந்தான். அடர்ந்த புருவங்களுக்குக் கீழே அவனது சிறு கண்கள் வெறுப்புக் கலந்த சந்தேகத்துடன் பார்க்கும். அவன் ஒரு மந்தமான, உடல் முழுதும் ரோமம் அடர்ந்த தொழிலாளி. தொழிற்சாலையில் அவன்தான் சிறந்த தொழிலாளி. தொழிலாளர்களில் அவனே சிறந்த பலசாலி. ஆனால் அவன் தன் மேலதிகாரிகளோடு அடிக்கடி முறைத்துக்கொள்வான்; எனவே அவனால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. ஒவ்வொரு பண்டிகை நாளிலும் அவன் யாரையாவது நன்றாக அடித்து வெளுத்து வாங்கிவிடுவான். எனவே அவனை யாருக்கும் பிடிப்பதில்லை எல்லோரும் அவனைக் கண்டு பயந்தார்கள். அவனை எப்படியாவது பதிலுக்குப் பதில் தாக்கிவிட வேண்டும் என்று எவரேனும் திட்டமிட்டாலும், நடைமுறையில் நிறைவேறுவதில்லை. தன்னை யாராவது தாக்க வருவதை விலாசவ் கண்டுவிட்டானானால், உடனே