பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

273


அவளது குரல் உள்ளடங்கியிருந்தது. மேலும் அவள் மெதுவாகத் தான் பேசினாள். அவளது நடமாட்டங்கள் மட்டும் விறுவிறுப்போடும் வேகத்தோடும் இருந்தன. அவள் தனது சாம்பல் நிறக் கண்களால் புன்னகை புரிந்தாள். அதில் வாலிப பாவமிருந்தது. அவளது கன்னப் பொறியில் சிறு சிறு சுருக்க ரேகைகள் விழுந்திருந்தன. அவளது சிறு காதோரங்களுக்கு மேல் இளம் நரை ரோமங்களும் மின்னிக் கொண்டிருந்தன.

“எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் காப்பி குடித்தால் தேவலை” என்றாள் அவள்.

“அதற்கென்ன. தயார் செய்கிறேன்” என்று பதிலுரைத்தாள் தாய். பதில் கூறி விட்டு அவள் அலமாரிக்குச் சென்று காப்பிச் சட்டியை எடுத்துக்கொண்டே கேட்டாள்.

“என்னைப்பற்றி டாவெல் சொன்னதாகவா சொன்னீர்கள்?”

“எவ்வளவோ சொல்லியிருக்கிறான்.”அந்த மாது தோல் சிகரெட் பெட்டியைத் திறந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள்.

“நீங்கள் அவனைப்பற்றி ரொம்பவும் பயந்து போயிருக்கிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டே அவள் அந்த அறைக்குள் உலவினாள்.

சாராய அடுப்பில், காப்பிச் சட்டிக்குக் கீழாக எரியும் நீலநிறத் தீ நாக்குகளைப் பார்த்துக்கொண்டே லேசாகப் புன்னகை புரிந்தாள் தாய். அந்தப் பெண்ணின் முன்னிலையில் ஏற்பட்ட சங்கட உணர்ச்சியை விழுங்கி உள்ளடக்கிய அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

“அப்படியென்றால், அவன் அவளிடம் என்னைப்பற்றிக் கூறியிருக்கிறான், நல்ல பிள்ளை!” என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு, பிறகு மெதுவாகச் சொன்னாள்.

“ஆமாம். அது ஒன்றும் சாமானியமான சிரமம் அல்ல. ஆனால், முன்புதான் அந்தச் சிரமம் எனக்குப் பெரிதாய் இருந்தது. இப்போது அவன் தன்னந் தனியாக இல்லை என்பதால் எனக்குக் கொஞ்சம் நிம்மதி”

அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டே தாய் அவளது பெயரைக் கேட்டாள்.


“சோபியா” என்றாள் அந்தப் பெண்.

தாய் அந்தப் பெண்ணைக் கூர்ந்து பார்த்தாள். அந்தப் பெண்ணிடம் ஏதோ ஒரு பரபரப்பு-அதீதமான அவசரமும் துணிவும் கொண்ட பரபரப்புக் காணப்படுவதாகத் தோன்றியது.

“இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் அதிக நாள் சிறையில் இருக்கக்கூடாது என்பதுதான்” என்று தீர்மானமாகச்