பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

15


வீடு திரும்புவான். ஆனால் ஓட்கா அவனுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை; அதனால் மிகவும் சிரமப்பட்டான். திங்கட்கிழமைக் காலை நேரங்களில் அவன் தலைவலியோடும் நெஞ்செரிச்சலோடும் எழுந்திருப்பான்; அப்போது அவனது முகம் வெளுத்துப் பரிதாபமாயிருக்கும்.

“நேற்று நாள் இன்பமாய்க் கழிந்ததா?” என்று அவன் தாய் ஒரு முறை கேட்டாள்.

“நரகம்தான்!” என்று புகைந்துபோன எரிச்சலோடு பதில் சொன்னான் பாவெல். “இதைவிட மீன் பிடிக்கப் போயிருக்கலாம். அல்லது ஒரு துப்பாக்கி வாங்கி, வேட்டையாடியாவது பொழுதைப் போக்கலாம்.”

அவன். நேர்மையோடு உழைத்தான். ஒருநாள் கூட ஊர் சுற்றியதில்லை; அபராதம் கட்டியதில்லை. அவன் எப்போதுமே அமைதியான ஆசாமி; எனினும் தன் தாயின் கண்களைப் போன்ற அவனது அகன்ற நீலக் கண்களில் மட்டும், அதிருப்தி பிரதிபலித்துக் கொண்டிருக்கும். அவன் தனக்கென ஒரு துப்பாக்கி வாங்கவும் இல்லை; மீன் பிடிக்கப் போகவுமில்லை. ஆனால், மற்றவர்கள் யாரும் செல்லாத ஒரு புதிய பாதையிலேயே அவன் சென்று கொண்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவன் இப்போதெல்லாம் கூட்டாளிகளோடு கூத்தடிக்கச் செல்வதில்லை. பண்டிகை நாட்களில் அவன் எங்கேயோ காணாமல் போய்விடுவான், திரும்பி வரும்போது குடிக்காமலே சுவாதீனமான புத்தியோடு வந்து சேருவான். அவனது தாயின் கூர்மையான பார்வையில், தன் மகனது பழுப்பேறிய முகம் வரவர மெலிந்து வருவதாகவும், கண்களில் அழுத்த பாவம் குடிபுகுந்து விட்டதாகவும் உதடுகள் இணைந்து இறுகி உறுதி பாவம் பெற்றது போலவும் தோன்றியது. அவன் எதையோ நினைத்துத் துயரப்படுவது போலவோ, அல்லது ஏதோ ஒரு நோய் அவனை உருக்கி உருக்குலைத்துக்கொண்டிருப்பது போலவோதான் தோன்றியது. இதற்கு முன்பெல்லாம் அவனது நண்பர்கள் பலர் வீட்டுக்கு வருவார்கள். இப்போதோ பாவெலை வீட்டில் காண முடியவில்லையாதலால், வீட்டிற்கு வருவதையே அவர்கள் நிறுத்திவிட்டார்கள். தொழிற்சாலையிலுள்ள மற்ற இளைஞர்களைப் போல் இல்லாது பாவெல் மாறுபட்டு இருப்பது தாய்க்கு ஆனந்தம் தந்தது; எனினும் தன்னைச் சுற்றியுள்ள இருண்ட வாழ்விலிருந்து விலகி வேறொரு புதிய பாதையில் கவனமாகவும் பிடிவாதமாகவும் சென்று கொண்டிருக்கிறான் என்ற உண்மை புரியாத ஒரு அச்சத்தைத் தந்தது