பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

மக்சீம் கார்க்கி


யாகவ் மேஜைமீது ஒரு பாத்திரம் நிறைய ‘க்லாஸ்’ பீரும், வசந்த காலத்து வெங்காயம் சிலவற்றையும் கொண்டு வந்துவைத்தான்.

“சவேலி, இங்கே வா, நான் உனக்குக் கொஞ்சம் பால்கொண்டு வந்திருக்கிறேன்” என்றான் அவன்.

சவேலி தலையை ஆட்டினான். ஆனால் யாகவ் கக்கத்தில் கைகொடுத்து அவனை மேஜையருகே கூட்டிச் சென்றான்.

“அவனை ஏன் இங்கு வரவழைத்தீர்கள்? அவன் எந்த நிமிஷத்திலும் சாகக்கூடிய நிலைமையிலிருக்கிறானே” என்று ரீபினை நோக்கிக் கண்டிக்கும் தோரணையில் சொன்னான் சோபியா.

“எனக்குத் தெரியும்” என்றான் ரீபின், “ஆனால் அவனால் முடிந்த மட்டும் அவன் பேசிக்கொண்டிருக்கட்டும். அவனது வாழ்க்கை எந்த நல்ல காரணத்துக்காகவும் தியாகம் செய்யப்படவில்லை. அந்தக் கடைசிக் காலத்தையாவது அவன் நல்லபடியாய்ச் செலவழிக்கட்டுமே. எல்லாம் சரியாய்ப் போகும் — நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்!”

“இதில் என்ன, நீங்கள் ஆனந்தம் காண்கிறீர்கள் போலிருக்கிறதே!” என்றாள் சோபியா.

ரீபின் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விரக்தியோடு சொன்னான்:

“சீமான் வீட்டுப் பிறவிகளான நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு முனகித் தவிக்கும் ஏசு சிறிஸ்துவைக் கண்டாலும்கூட ஆனந்தம் கொள்வீர்கள். ஆனால் நாங்களோ இந்த மனிதனிடமிருந்து ஒருபாடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்; நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறோம்.......”

தாய் பயத்தோடு தன் புருவத்தை உயர்த்தியவாறே சொன்னாள்.

“சரி, சரி. இது போதும்.”

மீண்டும் அந்த நோயாளி மேஜையருகே தானிருந்த இடத்திலிருந்தே பேசத் தொடங்கினான்:

“அவர்கள் ஏன் மக்களை வேலையால் சாகடிக்கிறார்கள்? ஒரு மனிதனின் வாழ்நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டுப் பறிக்கிறார்கள்? எங்கள் முதலாளி—நான் நெபியோதவ் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன்—ஒரு பாட்டுக்காரிக்குக் குளிப்பதற்காக தங்கப் பாத்திரம் ஒன்றைப் பரிசளித்தான். அவளது படுக்கைக்குக் கீழே போடுவதற்கு ஒரு தங்கத்தாலான மூத்திரச் சட்டியைக்கூடப் பரிசளித்தான்; என்னுடைய பலமும் என்னுடைய வாழ்க்கையும் அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே